10 எம்பி சீட்டுக்கு திமுக போட்ட கண்டிஷன்! பரிதவிக்கும் காங். தலைவர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2024, 9:14 pm
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஏனென்றால் கடந்த 28ம் தேதி அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தமிழக காங்கிரஸ், புதுச்சேரியையும் சேர்த்து 15 தொகுதிகள் கேட்டதாகவும், அதற்கு திமுக சம்மதிக்கவில்லை என்றும் தகவல் அரசியல் வட்டாரத்தில் கசிந்தது. என்ற போதிலும் தமிழகத்தில் ஆறு தொகுதிகளும் புதுச்சேரியும் என சேர்த்து மொத்தமே ஏழு தொகுதிகள்தான் தர முடியும் என்று திமுக தலைமை கறாராக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த மேலிட காங்கிரஸ் மூவர் குழு பலத்த அதிர்ச்சிக்கும் உள்ளானது.
இதன் காரணமாகத்தான் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
எனினும் பேச்சுவார்த்தைக்கு பின்பு வெளியே வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி முதல் கட்ட பேச்சு வார்த்தை திருப்திகரமாக அமைந்தது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 13ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து தொகுதி பங்கீட்டை சுமுகமாக பேசி முடிப்பார் என்று குறிப்பிட்டார். இது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவது போல இருந்தது.
அதேநேரம், கார்கேயின் சென்னை வருகை மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகதான், பிறகட்சி தலைவர்களை சந்திக்கும் தேதியை முடிவு செய்யவேண்டும், உங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ள எங்களை வற்புறுத்தாதீர்கள். ஏனென்றால் எங்கள் முதலமைச்சர் அன்று பல்வேறு பணிகளில் தீவிரமாக இருப்பார். அதனால் அன்றைய தினம் அவரை சந்திப்பது இயலாத காரியம். நாங்கள் சொல்லும் தேதிக்கு உங்கள் கட்சியின் தலைவர் சென்னைக்கு வந்தால் போதும்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டதாக தெரிகிறது.
இதனால்தான், கார்கேயின் சென்னை வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இதைவிட மிகுந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதல் கட்ட பேச்சு வார்த்தையின்போது, முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், “உங்களிடம் கூட்டணி கட்சிகள் அதிகமாக இருக்கின்றன என்பது உண்மைதான். அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி உங்களுக்கு உள்ளது. அதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே புதுச்சேரியையும் சேர்த்து எங்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்தால் போதும்” என்று இறங்கி வந்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட திமுக தொகுதி பங்கீட்டு குழு, திமுக விதிக்கும் நான்கு முக்கிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் நீங்கள் கேட்கும் 10 தொகுதிகளை தாராளமாக ஒதுக்கி விடுகிறோம் என்று கூறிவிட்டு அவை என்னென்ன என்பது பற்றியும் தெரிவித்து உள்ளது. அதைக் கேட்ட காங்கிரஸ் குழுவினர் மயக்கம் போட்டு விழாத குறை தான்.
திமுக விதித்ததாக கூறப்படும் அந்த நிபந்தனைகள் இவைதான்.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 70 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த வயதுக்கு மேற்பட்டவர்களை போட்டியிட அனுமதிக்க கூடாது.
கட்சியில் உள்ள தலைவர்கள் யாருமே தங்களது வாரிசுகளுக்கு எம்பி சீட் கேட்கக் கூடாது. அவர்களுக்கு கண்டிப்பாக சீட் தந்தே ஆகவேண்டும் என்று டெல்லி மேலிடம் மூலம் எங்களுக்கு அழுத்தமும் தரக் கூடாது. மறைந்த தலைவர்களின் வாரிசுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் உங்களது கட்சிக்காரர்கள் யாரையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம்.
தவிர, போட்டியிடுபவர்கள் தொகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகம் ஆனவராக இருக்கவேண்டும். தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களை நிறுத்தக்கூடாது.
இந்த நிபந்தனைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினர் அறிவாலயத்திலிருந்து உடனடியாக வெளியேறி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. திமுக வைத்ததாக கூறப்படும் வேண்டுகோள் என்கிற மாதிரியான இந்த நிபந்தனைகளால் தமிழக காங்கிரசுக்கு பெரிய தலைவலியே ஏற்பட்டுள்ளது, என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால் வாரிசுகளுக்கு சீட் கேட்கக்கூடாது என்கிறபோது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோருக்கு எம்பி சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது வெளிப்படை. அதேநேரம் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடக் கூடாது என்று வலியுறுத்துவதால் முதிய வயது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுகவினர் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணியாற்றுவது தவிர்க்கப்படும்.
தற்போது தென் மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்கள் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை திமுக துளியும் விரும்பவில்லை. ஏனென்றால் அந்த எம்எல்ஏ வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் காலியாகும் அந்த சட்டப் பேரவை தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்கும் கட்டாயம் திமுகவுக்கு ஏற்படும்.
ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 300 கோடி ரூபாய்க்கு மேல் திமுக செலவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் அது போன்றதொரு சூழ்நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பமாட்டார் என்கின்றனர்.
அதேநேரம் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எங்களது பூர்வீகம் இந்தத் தொகுதிதான், அதனால் எம்பி சீட் வேண்டும் என்று கோருவதை தவிர்க்க திமுக தலைமை விரும்புகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் இவர்கள் சொந்த ஊரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் பங்கேற்பார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தின் காரணமாக இப்படியொரு நிபந்தனையை
திமுக விதித்திருக்கலாம்.
இந்த நிபந்தனைகளில் வாரிசுகளுக்கு எம் பி சீட் ஒதுக்க கூடாது என்பதும், 70 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பதும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரை திகைப்படைய வைத்துள்ளது.
ஏனென்றால் திமுகவில் துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி ஆகியோரின் மகன்கள் தற்போது எம்பிக்களாக உள்ளனர். வரும் தேர்தலில் இவர்களின் வாரிசுகளுக்கு திமுக எம் பி சீட் கொடுக்காமல் இருக்குமா?…
மேலும் அமைச்சர்கள் எ வ வேலுவின் மகன் கம்பன், கே என் நேருவின் மகன் அருண், எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் போன்றோரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படியெனில் இவர்களுக்கும் சீட் கிடையாது என்று திமுக கை விரிக்குமா?…
காங்கிரஸ் தலைவர்களில் ப சிதம்பரம், திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு போன்றவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதை மறைமுகமாக கூறும் விதமாகத்தான் திமுக தலைமை இப்படி எங்களுக்கு 70 வயது வேட்பாளர்களே வேண்டாம் என்று செக் வைப்பதாக தெரிகிறது.
திமுகவில் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களில் துரைமுருகன், கே என் நேரு, எ.வ.வேலு,சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் என பலர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
தவிர 83 வயதாகும் டி ஆர் பாலு எம்பியின் மகன் டிஆர்பி ராஜா தமிழக அமைச்சராகவும் உள்ளார். அவ்வளவு ஏன் முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி கூட வாரிசு என்கிற முறையில்தானே அமைச்சராக இருக்கிறார்?…
இனி இவர்களை எந்த தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்க மாட்டோம் என்று திமுகவால் உறுதியாக கூற முடியுமா? என்று முணுமுணுத்துக் கொண்டே சரிமாரியாக கேள்விகளை எழுப்பும் தமிழக காங்கிரஸின் அந்த மூத்த நிர்வாகிகள், “இந்த நிபந்தனைகள் கொஞ்சம் கூட நியாயமாகத் தெரியவில்லை. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்றால் முழுமையான வெற்றி என்பதே சாத்தியமில்லை” என்றும் மனம் குமுறுகிறார்கள்.
இவர்கள் இப்படி புலம்புவதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.