காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா?… திமுக போட்ட திடீர் கண்டிஷன்.. தொகுதி பங்கீட்டில் செக்..!
Author: Babu Lakshmanan27 January 2024, 7:45 pm
புதுவையில் திமுகவின் முன்னணி தலைவர்கள், தமிழக அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுகிறார்கள் என்றாலே காங்கிரசுக்கு ஏதாவது ஒரு சிக்கல் உருவாகிவிடுகிறது என்பதை ஒவ்வொரு தேர்தலின்போதும் காண முடிகிறது.
2021-ம் ஆண்டு ஜனவரியில் புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் எம்பி அதே மாதம் 18ம் தேதி கட்சியின் புதுவை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது டெல்லி காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடைய செய்யும் அளவிற்கு பரபரப்பு காட்டினார்.
அந்த நேரத்தில் புதுச்சேரியில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. இதனால் சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற சந்தேகமும் அப்போது எழுந்தது.
இந்த நிலையில்தான் ஜெகத்ரட்சகன் பேசும்போது “புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிடும். அனைத்து தொகுதிகளையும் திமுக நிச்சயம் கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி நடக்கவில்லை என்றால் இதே மேடையில் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வேன்” என்று அதிரடி காட்டினார்.
இதனால் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் இறங்கி வரவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை திமுக கூட்டணியில் 18 முதல் 22 தொகுதிகள் வரை போட்டியிட்டு வந்த காங்கிரஸ் 2021 தேர்தலில் 15 இடங்களில் மட்டுமே களம் காண முடிந்தது. மற்ற 15 தொகுதிகளையும் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து கொண்டன.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில்தான் அப்போது வெற்றி பெற முடிந்தது. அதேநேரம் திமுக ஆறு இடங்களை கைப்பற்றிவிட்டது.
இதன் மூலம் காங்கிரசுக்கு திமுக உணர்த்திய பாடம், உங்களைவிட எங்களுக்குத்தான் புதுச்சேரியில் அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்ததுதான்.
இதேபோன்றதொரு இடியாப்ப சிக்கல்தான் தற்போது தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரசுக்கு எழுந்துள்ளது. புதுவை நகரில் மிக அண்மையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது காங்கிரசை கடுமையாக போட்டு தாக்கினார்.
இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? அல்லது காங்கிரசை திமுக கழற்றி விடுமா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி விட்டுள்ளது.
அவர் ஆவேசமாக பேசுகையில் தேர்தல் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் அரசியலில் தீவிரம் காட்டுகிறது, மற்ற நேரங்களில் அது செயல்படுவதே இல்லை என்பது போன்றதொரு குற்றச்சாட்டை வெளிப்படையாகவே முன் வைத்தார்.
“கூட்டணி கட்சிகளிடம் சீட் வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சியை நடத்துகிறது. அதில் என்ன பிரயோஜனம்?…உழைக்கணும்… மக்களுக்கு சேவை செய்யணும். தேர்தல் வந்தால் மட்டும் காங்கிரஸ் எட்டிப் பார்க்கிறது. இதனால்தான் பாஜக இங்கு கொஞ்சம் ஆட்டம் போடுதே தவிர எங்களிடம் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. பாஜகவால் தமிழ்நாட்டில் ஒன்னும் ஆட்டம் போட முடியாது. தற்போது காங்கிரஸ் வலிமை இழந்த கட்சியாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்” என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் காட்டமாக தாக்கியது. அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரல் ஆகியும் வருகிறது.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு ஜனவரி 28ம் தேதி மாலை
4 மணி அளவில் அறிவாலயத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் சென்னைக்கு வந்து டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசுவதற்காக அறிவாலயம் செல்ல திட்டமிட்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் இப்படி பேசி இருப்பது டெல்லி காங்கிரஸ் தலைமையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
காங்கிரசைப் பொறுத்தவரை, இந்த முறை தமிழகத்தில் திமுகவிடம் எப்படியும் 15 தொகுதிகளை கேட்டு வாங்கி விடவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இத்தனை தொகுதிகள் கேட்டால்தான் குறைந்தபட்சம் 12 எம்பி சீட்டுகளாவது கிடைக்கும் என்றும் அது கணக்கு போடுகிறது.
ஆனால் திமுகவோ மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்டுப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 25 எம்பிக்களாவது தங்களிடம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறது.
அதனால் தமிழக காங்கிரசுக்கு ஐந்து முதல் ஏழு தொகுதிகளை ஒதுக்குவதற்கே திமுக விரும்புகிறது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது இதை டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களிடம் நேரடியாக கூறினால் தங்களுக்கு தர்ம சங்கட நிலை ஏற்படும் என்று கருதியோ, என்னவோ அவர்கள் சென்னை வருவதற்கு முன்பாகவே ராஜ கண்ணப்பனை விட்டு கூட்டணி கட்சிகளிடம் சீட் வாங்குவதற்காக மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்துகிறது என்று திமுக பேச வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவர் டி ஆர் பாலுவின் அனுமதியை பெறாமல் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுபோல பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
சரி.அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?…
“75 ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் திமுகவுக்கு இது போன்ற தேர்தல் தந்திரங்கள் எல்லாம் அத்துபடி. மேலிட காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் இருவரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதேநேரம், 2019 நாடாளுமன்ற தேர்தலை விட காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்கவேண்டும், அப்போதுதான் டெல்லியில் தங்களது கை ஓங்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருதுகிறார்.
அதுவும் இண்டியா கூட்டணி மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சிதறிவிட்ட நிலையிலும், இந்தக் கூட்டணியை விட்டு பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையிலும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் காங்கிரசை அச்சுறுத்தும் விதமாக பேசி இருக்கிறார் என்றால் தமிழகத்தில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக
7 தொகுதிகளுக்கு மேல் திமுக ஒதுக்காது என்பது நன்றாகவே தெரிகிறது.
அதனால்தான் 2021 புதுச்சேரி மாநில சட்ட பேரவை தேர்தலில் ஜெகத்ரட்சகன் எம்பி மூலம் காங்கிரசை பணிய வைத்தது போல தமிழகத்திலும் செய்து விடலாம் என்று திமுக தலைமை இப்போது ராஜ கண்ணப்பனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த தேர்தலில் புதுவை தொகுதியை காங்கிரஸுக்கு தரக்கூடாது. நமது கட்சியே நிற்க வேண்டும் என்று அந்த மாநில திமுக நிர்வாகிகள் தலைமையை வற்புறுத்தி வருகின்றனர். அதனால் புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்திலும், பஞ்சாபிலும் இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களை தவிக்க விட்டதுபோல தமிழகத்திலும் அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க திமுக எவ்வளவு தொகுதிகளை குறைத்துக் கொடுத்தாலும் அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொள்ளவே செய்யும். ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் கே எஸ் அழகிரி, செல்வப் பெருந்தகை, திருநாவுக்கரசர், கேவி தங்கபாலு போன்றவர்கள் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. மாறாக கூட்டணி தர்மம் என்று சொல்லிக் கொண்டே தமிழக காங்கிரசை திமுகவிடம் அடகு வைத்தும் விட்டனர். அதனால் காங்கிரசுக்கு திமுக 7 தொகுதிகள் கொடுத்தாலே அது மிகப்பெரிய விஷயமாகத்தான் இருக்கும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
====