மன்னிப்பு கேட்க இழுத்தடித்த ஆர்.எஸ்.பாரதி… திமுகவின் தேர்தல் அலர்ட்…? அரசியல் களத்தில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
31 October 2022, 7:35 pm

சர்ச்சைக்குரிய விதமாக எதையாவது பேசுவது என்றால் அதில் திமுகவின் மூத்த தலைவர்களை மிஞ்ச யாருமே கிடையாது என்று கூறும் அளவிற்கு கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் பொது வெளியில் கொளுத்தி போட்ட சர வெடிகள் ஏராளம். அது பொதுமக்களிடையே ஏற்படுத்திய தாக்கமும் மிக அதிகம்.

ஆர்எஸ் பாரதி

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுகவின் அமைப்புசெயலாளர் ஆர்.எஸ். பாரதி, “இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திமுகதான் காரணம். வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன்.

பட்டியல் இன வகுப்பை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இன்னும் ஒருபடி மேலே போய் ” இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய. காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது” என்று நையாண்டி செய்தார்.

கண்டனம்

ஒரே நேரத்தில் இரு விஷயங்களை பேசி அதில் நீதித்துறையையும், டிவி செய்தி சேனல்களையும் கடுமையாக தாக்கியதால் அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி அனைத்து தரப்பில் இருந்தும் ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனக் கணைகள் பாய்ந்தன.
இது திமுக தலைமைக்கு அப்போது பெரும் தலைவலியாக இருந்தது.
இதை உணர்ந்து கொண்டதாலவோ, என்னவோ அடுத்த சில நாட்களிலேயே தனது சர்ச்சை பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் நேர்ந்தது.

“நான் பேசிய சில வார்த்தைகள் பட்டியல் இன மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நோக்கம் பட்டியல் இன மக்களின் மனதை புண்படுத்துவது அல்ல. திமுக அரசு அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் இது தொடர்பான வழக்கில் கோர்ட்டு ஆர்.எஸ் பாரதிக்கு குட்டும் வைத்தது. இந்த நிலையில் கடந்த மே மாத இரண்டாவது வாரத்தில் அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக பொதுச் செயலாளர் வைகோவை சாடும் விதமாக ஒரு கருத்தை தெரிவித்தார்.

வைகோவிடம் சீண்டல்

அந்த சமயத்தில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போன போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. தேம்ஸ் நதியைப் போல திமுக 70 வருடங்களாக போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் பல நூறாண்டுகள் போகும்” என்றார்.

ஏற்கனவே வைகோவை பற்றி மூத்த அமைச்சர் துரைமுருகனும் இதேபோன்ற கருத்தை ஒரு வருடத்திற்கு முன்பு, ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் மதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பு வைகோவிடம் இல்லாததால், இந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போய்விட்டது.

vaiko Condemned - Updatenews360

அதேபோல்தான்,வைகோ பற்றி ஆர் எஸ் பாரதி விமர்சித்ததும் சில நாள் சலசலப்புடன் அப்படியே அடங்கிப் போனது.

காமராஜர்

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், அவர் ஒரு கூட்டத்தில் மறைந்த முதலமைச்சரும், காங்கிரசில் கிங்மேக்கராக திகழ்ந்தவருமான காமராஜர் பற்றி அவர் பேசும்போது, “பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். எந்த காங்கிரஸ்காரர்களும் அதைச் செய்யவில்லை. இன்றுவரை காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையில்தான் காங்கிரசார் அனைவரும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும். நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசியிருந்தார்.

காமராஜரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி பேசியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்தனர்.

rs bharathi - updatenews360

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் இருவரும் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். காமராஜர் சொல்லாத ஒன்றை ஆர் எஸ் பாரதி கூறுகிறார். இதற்காக அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆவேசத்துடன் கொந்தளிக்கவும் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மாணிக்கம் தாகூர் எம்பி கண்டனம் தெரிவித்த பிறகுதான் தமிழக காங்கிரஸ் தலைவர்களே விழித்துக் கொண்டனர். ஆனால் திமுக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சியால் அறிவாலயத்திற்கு பெரிய அளவில் அழுத்தம் எதையும் கொடுக்க முடியவில்லை. சிறு முணுமுணுப்போடு முடிந்தது.

அதேநேரம், காமராஜர் சார்ந்த நாடார் சமூக மக்கள் மாநிலத்தின் பல நகரங்களில் ஆர் எஸ் பாரதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அவர் காமராஜர் பற்றி பேசியதை மக்களுக்கு விளக்கிக் கூற ஆரம்பித்தனர்.

குறிப்பாக நாடார் சமூக மக்கள் அடர்த்தியாக வசிக்கும் கன்னியாகுமரி, தூத்துக்குடி,
விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் அவர்கள் பரவலாக வாழும் மதுரை,தேனி, திண்டுக்கல்,கோவை, சேலம்,வேலூர், சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன.

இந்த நிலையில்தான், ஆர் எஸ் பாரதி, மறைந்த பெரும் தலைவர் காமராஜர் பற்றிய தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியதை “வெட்டியும், ஒட்டியும்” பாஜக சார்ந்த சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளன. என்னுடைய முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும். இது குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளேன், இருப்பினும் என் பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

தேர்தல் அலர்ட்

“காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பொதுவெளியில் பேசி ஐந்து வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது திடீரென ஞானோதயம் பெற்றதுபோல் அவர் வருத்தம் தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது” என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“பொதுவாக அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட மூத்த தலைவர்கள் எதையாவது சர்ச்சைக்குரிய விதமாக பேசினால் அது பொதுவெளியில் ஒரு வாரத்திற்கு பெரும் பேசு பொருளாக இருக்கும். அதன் பின்பு படிப்படியாக அது அடங்கிவிடுவது வழக்கம். ஆனால் ஆர்எஸ் பாரதியை பொறுத்தவரை, தேசிய அளவில் மாபெரும் தலைவராக திகழ்ந்த ஒருவரை நாம் கடுமையாக விமர்சிக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு தன் மனதில் தோன்றியதை அவர் பேசியிருக்கிறார். அது அத்தனை ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. அதை யாரும் வெட்டி ஒட்டியதாக தெரியவும் இல்லை.
மாறாக, பாஜகவினர்தான் இப் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டனர் என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது 76 வயதாகும் ஆர்எஸ் பாரதிக்கு அவருடைய இளம் பருவத்தில் காமராஜர்,
திமுகவுக்கு கடும் சவாலாக இருந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த எண்ணம், ஆதங்கம் தற்போது அவரிடம் வெளிப்பட்டு இருக்கலாம். அதேநேரம், தான் பேசியது, இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் என்று ஆர்எஸ் பாரதி ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தமிழக காங்கிரஸ் இப் பிரச்சனையை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட மாநில பாஜகவினர் ஆர்எஸ் பாரதி, காமராஜர் பற்றி
ஏரளனமாக பேசியிருக்கிறார் என்பதை நாடார்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொண்டு சேர்த்து விட்டனர். தவிர நாடார் சமூகமும் மாநில முழுவதும் இதற்காக கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தொடங்கிவிட்டது. இது அச்சமூக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, என்பதை திமுகவில் உள்ள நாடார் வகுப்பினரும் உணர்ந்து கொண்டு விட்டனர் என்பதும் புரிகிறது.

இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில், குறைந்த பட்சம் 12 தொகுதிகளில் திமுகவுக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரம், இது பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மாறும் சூழலும் உருவாகலாம்.

இந்த நிலைமையை மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருமான கனிமொழியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலை உருவாகி விடக்கூடாது, அது அரசியலில் கட்சிக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தும். அது தேசிய அளவில் திமுகவுக்கு முக்கியத்துவம் கிடைக்காத நிலையையும் உருவாக்கி விடுமோ என்று திமுக அஞ்சுகிறது என்கின்றனர். அந்த முன்னெச்சரிகை உணர்வு காரணமாகத்தான் காமராஜர் பற்றி பேசியதற்காக
ஒரு மாதத்திற்கு பின்பு ஆற அமர ஆர்எஸ் பாரதி, இப்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இது திமுக தலைமை அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக கூட இருக்கலாம் என்றே கருத தோன்றுகிறது” என அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 644

    0

    0