விசாரணை தாமதம் ஆகுமா…? செந்தில் பாலாஜி வழக்கில் எழுந்த சிக்கல்… அமலாக்கத்துறை புதிய வியூகம்…!!
Author: Babu Lakshmanan19 June 2023, 9:20 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை அமலாக்கத்துறை எப்போது தொடங்கும் என்ற கேள்விதான் தற்போது அரசியலில் சூறாவளியாக சுழன்று வருகிறது.
இதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 1கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவரை கடந்த 14ம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவருடைய அரசு இல்லத்தில் 17 மணிநேர விசாரணைக்கு பின்பு மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தங்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தனக்கு கடுமையாக நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி சொன்னதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். பின்பு காவேரி மருத்துவமனையில் தன்னை சேர்க்கவேண்டும் என்று செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டதால் சென்னை ஐகோர்ட்டு அதை ஏற்றுக் கொண்டது.
தற்போது அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள மூன்று அடைப்புகளை அகற்றுவதற்காக வரும் 22ம் தேதி பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட இருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம் ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் வருகிற 23ம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரணை நடத்திக் கொள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
என்றபோதிலும் நெஞ்சுவலியை காரணம் காட்டி செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் மருத்துவமனையில் மட்டும்தான் விசாரிக்க வேண்டும்; வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது; சிகிச்சைக்கு தடை கூடாது; எவ்வித துன்புறுத்தலும் கூடாது என்று பல முக்கிய நிபந்தனகளை நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விதித்துள்ளது.
அதேநேரம் இதய அறுவை சிகிச்சைக்காக தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காக காவேரி மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர் கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தும் வருகின்றனர்.
இதனால் கடந்த 16ம் தேதி மாலையே தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி கிடைத்தும் கூட வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய வழக்கில் செந்தில் பாலாஜியிடம் இதுவரை அவர்களால் விசாரணையை தொடங்க முடியவில்லை. மேலும், தான் எடுத்துக்கொள்ள இருக்கும் அறுவை சிகிச்சை காரணமாக அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் நிலையும் உள்ளது.
இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முடித்து அது தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது.
ஆனால் செந்தில் பாலாஜியோ இதய அறுவை சிகிச்சையை காரணம் காட்டி தன்னிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நெருங்க விடாமல் தவிர்த்து வருகிறார். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தாலும் கூட இனி முழுமையாக குணமடையும் வரை விசாரணையை தவிர்க்கும் நிலையை அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் அவர் மீதான விசாரணையை எப்போது தொடங்குவது என்பது தெரியாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திணறி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய வழக்கில் எங்களிடம் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. அதேபோல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பினாமிகள் பெயரில் 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.
அதுபற்றியும் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு, வாக்குமூலம் பெற வேண்டி உள்ளது. அவரது உடல் நிலை விசாரணைக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என, டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம். அறுவை சிகிச்சை செய்தாலும், தொடர்ந்து விசாரிக்க முடியாது. இதனால், விசாரணை காலத்தை நீட்டிக்கக் கோரி, நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
ஏனென்றால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் வருகிற 23ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால்தான் அவருடைய நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து எங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு நீதிமன்றத்திடம் கோர இருக்கிறோம்”என்று குறிப்பிட்டனர்.
அத்துடன் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை வரும் 21ம் தேதி புதன்கிழமை விசாரிக்க கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேநேரம் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் ஒரு சில வாரங்கள் மட்டுமே அமலாக்கத் துறையின் நேரடி விசாரணையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து அவரால் நீண்ட காலத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தவிர்க்க முடியாது என்று இதய நோய்த்துறை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு அவர்கள் கூறும் காரணம் இதுதான்: “இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு ஒரு நோயாளி மேலும் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்.
ஏனென்றால் சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். அறுவை சிகிச்சையில் எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் இதய நோய் மருத்துவ நிபுணர்கள் அப்போது கண்காணிப்பார்கள்.
ஒருவர் நோயின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். என்ற போதிலும் நன்கு குணமடைந்த நோயாளி ஒருவர் இரண்டே வாரங்களில் மருத்துவமனையின் படுக்கையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்று விடலாம். அவர் மீண்டும் முழுமையான இயல்பு நிலைக்கும் திரும்பி விடுவார். ஒரு சில மருந்து மாத்திரைகளை அவர் தொடர்ந்து எடுக்கவேண்டிய நிலை மட்டுமே வரும்.
ஒரு சிலருக்கு வயது மூப்பு மற்றும் இதர நோய்களின் பிரச்சினையின் தீவிரத்தை பொறுத்து இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு முழுமையான மீட்பு ஏற்படும்.
எனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஒருவர் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி” என்கின்றனர்.
“இதய நோய்த்துறை மருத்துவ நிபுணர்கள் கூறுவதை பார்த்தால், அமைச்சர் செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு ஜூலை மாதம் முழுவதும் மருத்துவமனையில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஒருவேளை நன்கு குணம் அடைந்து விட்டால் இரண்டு வாரங்களிலேயே கூட டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். எப்படி பார்த்தாலும் ஜூலை மாத இறுதிக்குள் அமலாக்கத்துறையின் நேரடி விசாரணை வளையத்திற்குள் அவர் வந்து விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
அதுவரை அவர் ஜாமீனில் வெளிவந்து விடாத அளவிற்கு நீதிமன்ற காவலை அமலாக்கத்துறை நீட்டிக்க வைத்து 10 நாட்கள் வரை அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கும் அமலாக்கத்துறை முயற்சிக்கலாம். எனவே அவர்களின் பிடியிலிருந்து செந்தில் பாலாஜி விடுபடுவது கடினமான செயலாகவே இருக்கும்” என்று பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்!
என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!