ஓபிஎஸ் அதிமுகவை கைப்பற்ற திமுக ஆதரவு..? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டுவிட்டால் இபிஎஸ் தரப்பு கடுப்பு

Author: Babu Lakshmanan
16 July 2022, 2:45 pm

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு, திமுகவுடன் மறைமுக உறவு வைத்து அதிமுகவை அழிக்க முயற்சித்ததாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

Ops - Updatenews360

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும், திமுகவுக்கு மறைமுக தொடர்பு இருக்குமோ..? என்ற பேச்சும் அடிபடத் தொடங்கியது. இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்ததாகவே உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.

நேற்றிரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக இருப்பதாக அமைந்துள்ளது. அதாவது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதற்கான தீர்மானம் 2,500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு விட்டது. பெரும்பாலான ஆதரவு கொண்ட எடப்பாடி பழனிசாமி பக்கமே அதிமுக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதனை உணர்ந்து, பாஜக, பாமக தலைவர்கள், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த பதிவில், “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவு அதிமுகவை கைப்பற்ற சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக மறைமுக ஆதரவு கொடுத்து வருவது உறுதியாவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!