ஆளுநர் தலை மேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என திமுக ஒத்துக்கொள்ளும் : அண்ணாமலை சாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 9:58 pm

ஆளுநர் தலை மேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என திமுக ஒத்துக்கொள்ளும் : அண்ணாமலை சாடல்!!

ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பூதாகரமாகி இருக்கிறது.

இது குறித்து அன்றைய தினமே போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், “மதியம் சுமார் 03.00 மணியளவில், சர்தார் படேல் சாலை வழியாக அடையாளம் தெரியாத ஒரு நபர் நடந்து வந்தார். இவர் நான்கு பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை கொண்டுவந்ததாகத் தெரிய வருகிறது. பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை அவர் ஆளுநர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது, பணியிலிருந்த பாதுகாப்பு போலீசாரால் அவர் தடுக்கப்பட்டார். அப்போது அவர் எறிய முற்பட்ட இரண்டு பாட்டில்களானது வெளிப்புற சாலையில் (சர்தார் படேல் சாலை) விழுந்தன.

பின்னர், அவர் பாதுகாப்பு போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையைச் சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேற்படி செயலில் ஈடுபட்ட நபர் நந்தனம் SM நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் எனவும், இவர் மீது E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ‘C வகை சரித்திரப் போக்கிரிப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதும், முன்பு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 10.02.2022 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.
என்பதும், மேற்சொன்ன அனைத்து வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு.

நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இவர் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். மேற்படி செயல் தொடர்பாக, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி இடத்தில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், மேற்படி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசியது தடுக்கப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.” என்று குறிப்பிட்டு இருந்தது.

நேற்று மதியம் மீண்டும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கைதான ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசியவர் என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்ததே பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்தான் திமுக முழு விபரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. பாஜகவோ, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் 2 ஆண்டுக்கு முன்பே கட்சியிலிருந்து விலகியதாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு போலீஸ் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில், போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை உடனடியாக பிடிப்பது, ஆளுநர் மாளிகைக்கு வெளியில்தான் பெட்ரோல் குண்டு வைக்கப்பட்டது என்பதும் தெளிவானது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்து உள்ள அண்ணாமலை, “தமிழ்நாடு ஆளுநர் தலையில் பெட்ரோல் குண்டு போட்டால்தான் திமுக ஒத்துக்கொள்ளும். 2 நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வெளியே வந்தவரை கண்காணிக்க முடியாத போலீசால் இங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு என்ன நம்பிக்கை தர முடியும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 310

    0

    0