போலி வெற்றிக்கு திமுக போராடும்… இடைத்தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை : ஜெயக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 7:07 pm
Jaya
Quick Share

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வில் இருந்து சி அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி வி சண்முகம், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம் நடைபெற்றதை அடுத்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, நிர்வாகத் திறனற்ற அராஜக திமுக ஆட்சியில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது;
திராவிட முன்னேற்றக் கழக அரசு அராஜகத்தின் அடையாளம், அட்டூழியத்தின் அடையாளம் பண பலம், படைபலம் இவைகளைக் கொண்டு ஜனநாயகத்தை குழி தோண்டி, புதைக்கும் செயலில் வல்லமை பெற்ற கட்சி திமுக.

ஜனநாயகத்தின் நெறிகளை கொன்று ஈரோடு இடைத்தேர்தலில் அவர்கள் மக்களை ஆடு மாடுகளை போல் பட்டியில் அடைத்து வைத்தனர். எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்திற்கு மக்கள் செல்லக்கூடாது என்று மக்களை அடைத்து வைத்தனர். ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ஜனநாயகத்தின் நெறியில் செயல்படவில்லை.

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக பணபலம் படைபலத்தை கொண்டு கோடி ரூபாயை வாரி இரைப்பார்கள். திமுக அரசு அராஜக அரசு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வலிமையான கட்சி திமுக தான்.

திமுகவின் அராஜகத்தை கண்டித்து 2009ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணித்தார். அதுபோல், 2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒருமனதாக புறக்கணிக்கின்றோம்.

திமுக ஆட்சியில் இருக்கும் வரை தேர்தல் சமூகமாக நடைபெறாது அராஜகத்தை தான் கட்டவிழ்த்து விடும். பண பலம் உள்ளவர்கள் போலியான வெற்றியைப் பெறுவார்கள். போலி வெற்றியை உறுதி செய்ய திமுக இந்த இடைத்தேர்தலில் போராடும்…

ஈரோடு இடைத் தேர்தலில் மாவட்ட ஆட்சியரிடம் திமுக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. இந்த தேர்தலிலும் அதே நிலை தான் நீடிக்கும். ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தால் அதிமுகவே வெற்றி பெறும் அது நடக்கவில்லை என்பதாலே இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கள நிலவரம் பொறுத்தவரை திமுக அராஜகத்தை நிறைவேற்றும்.

திமுக அமைச்சர்கள் அவர்களின் பணிகளை விட்டுவிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்காளர் வீட்டில் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

என்டிஏ கூட்டணி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் எல்லாம் பெரிய கட்சி கிடையாது… அதிமுக தான் பெரிய கட்சி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

Views: - 141

0

0