கொடுத்த வாக்குறுதியை மறந்து பேசறீங்களா? திமுக அரசுக்கே தலைகுனிவு.. ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி எம்எல்ஏ!!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2023, 8:13 pm
கொடுத்த வாக்குறுதியை மறந்து பேசறீங்களா? திமுக அரசுக்கே தலைகுனிவு.. ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி எம்எல்ஏ!!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராடியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசாணையில் 20 கிராமங்களில் 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நிலம் எடுப்பு பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி 43ல், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த அதிமுக ஆட்சியில் மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வந்தபோது, மக்களோடு நின்ற திமுக அரசு, தற்போது அதற்கு நேர்மறையாக நிற்பது என்பது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதியை மீறுகின்ற செயலாகும் இது மக்கள் மத்தியில், தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் நலன் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் பாசிச மோடி அரசு திணித்த நாசக்கார திட்டங்களை நடைமுறைப்படுத்த எடப்பாடி அரசு முயன்றதாலேயே, கடந்த 2021 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினர். தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து, திமுக அரசும் அதே தவறை செய்து விடக்கூடாது.
எனவே, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். தங்களின் நிலங்களைத் தர மறுத்து, பரந்தூர் புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்யும் போக்கினை தமிழ்நாடு அரசு நிறுத்துவதோடு, அம்மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.