பிரதமராகும் எண்ணம் உண்டா? வைரலாகும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு… நெட்டிசன்கள் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2023, 11:26 am
Quick Share

பிரதமராகும் எண்ணம் உண்டா? வைரலாகும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு… நெட்டிசன்கள் விமர்சனம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாஜக காங்கிரஸ் மற்றும் திமுகவை குறிவைத்து கடும் விமர்சித்து வருகிறது. வட மாநிலங்களிலும் பிரதமர் மோடி பேசும்போது திமுகவை குறிவைக்கிறார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மாநில கட்சியாக இருக்கும் திமுக தேசிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணி அமைய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார் ஸ்டாலின். அவரது விருப்பத்தின்படியே இன்று ‘இந்தியா’ கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் அகில இந்திய தலைவர்களை சென்னைக்கு அழைத்து மெகா மாநாடுகளையும் நடத்தி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதன் மூலம் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பெறுவதற்கு ஸ்டாலின் காய் நகர்த்துவதாக பேச்சுகள் நிலவுகின்றன. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்தால் பிரதமரை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவாகும் வாய்ப்பு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைக்கக்கூடும் என்ற பேச்சுகள் பரவி வருகின்றன.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் உரைகள், இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரால் பகிரப்படுகின்றன. இதன் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் தலைவராக உருவெடுக்க முயற்சிக்கிறார் என்றும், டெல்லியிலும், வட மாநிலங்களிலும் காலடித் தடத்தைப் பதித்து, பிரதமர் வேட்பாளர் என்ற இடத்திற்கும் அவர் செல்லக்கூடும் என்ற பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன.

இப்படியான சூழலில், திமுக இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன. இது எதற்காக? பிரதமராகும் லட்சியம் உங்களுக்கு இருக்கிறதா? என மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பதில்: அதற்கு, பதில் அளித்துள்ள தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “தேசிய அரசியலில் திமுக ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது திமுக. வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் திமுகவின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் தலைவர் கருணாநிதி.

இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற பாராட்டைப் பெறும் விதத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, இந்தியாவில் கூட்டணி அரசு தன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு உறுதுணையாக நின்று, மத்தியில் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது கருணாநிதியின் தி.மு.கழகம்தான்.

இரண்டு முறை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் திமுக முதன்மையாக இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் திமுகவின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன.

தலைவர் கருணாநிதியின் வழியில், நாட்டின் இன்றைய சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் திமுக தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்” என்று பதில் அளித்துள்ளார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 337

    0

    0