திமுகவின் புதிய ஃபார்முலா… தமிழகத்தின் நிலை என்னவாகுமோ..? ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்க ; கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan22 February 2023, 4:47 pm
கோவை : திமுகவின் புதிய பார்முலாவை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எல்லையையும் தாண்டி இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தேர்தலில் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெறப் போகிறாரா? அல்லது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.முக. வேட்பாளர் வெற்றி பெறப் போகிறாரா? என்பதைக் காட்டிலும், இத்தேர்தல் எந்தளவிற்குப் புதுப்புது உத்திகளோடு நடத்தப்படுகிறது என்பதே அனைத்து அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.
ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு புதிய பார்முலா கண்டுபிடிக்கப்பட்டு, ஆளும் தரப்பு ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெறும். இந்த பார்முலா மூலம் வேட்பாளர் வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எதைத் தடுக்கவேண்டுமோ அதைத் தடுக்காமல் விட்டுவிட்டு, உப்புச்சப்பில்லாத ஒன்றுக்கும் உதவாத சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துவிட்டு, ஏதோ தேர்தல் அனைத்தும் ஜனநாயக ரீதியாக நடப்பதைப்போல காட்டிக்கொள்கின்றனர்.
இதே போக்குகள் எதிர்காலத்திலும் தொடருமேயானால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பிய அவர்,தேர்தல் ஆணையம் களநிலவரத்தை ஆய்ந்தறிந்து, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, வாக்காளர்களை முடக்கு முகாம்களில் அடைத்துப் போடும். இதுபோன்ற புதுப்புது முறைகேடுகள் எதிர்காலத்தில் அரங்கேறா வண்ணமும், இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் எவரும் ஈடுபடாத வகையிலும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.