கரூர் ஐடி ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் : பரிதவிக்கும் பத்திரப்பதிவு அதிகாரிகள்?

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 9:34 pm

கடந்த 26-ம் தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக
மின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்திய அதிரடி ரெய்டு பின்னர் கோவை, ஈரோடு, சென்னை என்று விரிவடைந்தது.

தமிழகத்தை அதிர வைத்த ஐடி ரெய்டு

இதில் கரூர் அருகில் உள்ள ஆண்டான் கோவில் கிழக்கு என்ற கிராமத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சில நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதாக கூறப்படும் பிரமாண்ட ஆடம்பர பங்களாவிற்குள் நுழைந்தும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி தமிழகத்தையே அதிர வைத்தனர்.

இந்த சோதனை நடந்த நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில்தான் சோதனை நடைபெறுகிறது. என் வீட்டில் நடந்தாலும், நான் எதையும் எதிர்கொள்ள தயார்தான்! கடந்த 2006 முதல் நானும் என் குடும்பத்தினரும் எந்த சொத்தையும் வாங்கவில்லை. கரூரில் எனது சகோதரர் கட்டி வரும் வீடு அவருடைய மனைவியின் தாயார் தானமாக கொடுத்த இடம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்நாள் சோதனையின்போது வருமானவரித்துறை அதிகாரிகள் திமுகவினரால் தாக்கப்பட்டதால், மத்திய போலீஸ் படை பாதுகாப்புடன் ரெய்டு தொடர்ந்தது. முதலில் 40 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானபோதும் அது 210 இடங்களுக்கும் மேலாக இருந்தது.

அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்

ஏனென்றால் எட்டு நாட்கள் இந்த சோதனை சங்கிலி தொடர்போல் நீண்டு கொண்டே போனது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்டு இந்த சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன், டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் ஈரோடு சச்சிதானந்தம் அரசு ஒப்பந்ததார் சங்கர் ஆனந்த், நண்பர் கொங்கு மெஸ் சுப்பிரமணியம் ஆகியோரின் வீடுகள், வழக்கறிஞர் அலுவலகம் காட்டுமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தோண்டித் துருவினர். இறுதி நாள் சோதனையின்போது
2 பெட்டிகள் நிறைய முக்கிய ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்ததாகவும், 3 இடங்களுக்கு சீல் வைத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரூ.350 கோடி வருவாய் மறைப்பு?

எட்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 350 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூர் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதேநேரம் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு
மட்டும் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இச்சோதனை இன்னும் சில நாட்கள் கழித்து தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஆடம்பர பங்களாவால் சர்ச்சை

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆண்டான் கோவில் கிழக்கு கிராமப் பகுதியில் கட்டி வரும் ஆடம்பர பங்களாவுக்கான நிலம் வாங்கப்பட்ட விதம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் இவைதான்.”2 ஏக்கர் 49 சென்ட் நிலத்தை அசோக்குமாரின் மாமியார் லட்சுமி தனது மகள் நிர்மலாவுக்கு தானமாக கொடுத்தது, வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

ஏனென்றால் அந்த நிலத்தை 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுராதா என்பவர் மூலம் சுமார் 11 லட்சம் ரூபாய்க்கு கிரையம் செய்து அதை மேலக்கரூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லட்சுமி தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இரண்டு ஏக்கர் 63 சென்ட் நிலத்தை உள்ளூர் வங்கி ஒன்றில் அடமானம் வைத்து அதன் பேரில் அனுராதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து 30 கோடி ரூபாயை கடனாக பெற்று இருக்கிறார். ஆனால் அந்தக் கடனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஒரே நாளில் நான்கு தவணைகளாக செலுத்தி, நிலத்தை மீட்டு இருக்கிறார்.

பின்னர் 14 சென்ட் நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எஞ்சிய இரண்டு ஏக்கர் 49 சென்ட் நிலத்தை அசோக் குமாரின் மாமியார் லட்சுமியிடம் 11 லட்ச ரூபாய்க்கு அனுராதா கிரையம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மெகா மோசடி?

இதில் மிக முக்கியமாக வருமானவரித்துறை அதிகாரிகள் எழுப்பும் கேள்வி 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அனுராதா எதற்காக அடிமாட்டு விலையான
11 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும்?…அதை எப்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டு பத்திரப்பதிவும் செய்தனர்?…எனவே அவர்களுக்கு அதிகார பலம் மிகுந்த இடத்திலிருந்து அழுத்தம் கொடுத்திருக்கப்படவேண்டும்.

இல்லையென்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஒரு அதிகாரிகளும், ஊழியர்களும் இது போன்ற மெகா மோசடியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றனர். அவை கிடுக்கு பிடி கேள்விகளாகவும் மாறியுள்ளன.

இன்னொரு பக்கம் ஒரே நாளில் 30 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கிய கடனை ஒருவர் அடைத்தது பற்றி வங்கி அதிகாரிகள் ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி எங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காதது ஏன்? என்ற சரிமாரி கேள்விகளையும் ஐடி அதிகாரிகள் எழுப்புகின்றனர்.

இதனால்தான் வருமான வரி துறையினரின் சோதனை இன்னும் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிபுரியும் பதிவாளர்கள், சார்பதிவாளர்கள், ஊழியர்கள் அரசியல், செல்வாக்கு மற்றும் பணபலம் மிக்கவர்களிடம் அனுசரித்து செல்வது எல்லா காலங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் தங்களது எல்லையை மீறி பதவிக்கு ஆபத்து ஏற்படும் விதமாக எந்த ஒரு காரியத்தையும் செய்யத் துணிய மாட்டார்கள் என்பதும் உண்மை.

ரூ.30 கோடிக்கு ரூ.11 லட்சமா?

ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஒருவர் பதினோரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் என்றால் அந்த இடத்தை பதிவு செய்யும் முன்பு சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை நிராகரித்திருக்க வேண்டும். அல்லது சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு இணையான தொகையை பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால் லட்சுமிக்கு அனுராதா நிலத்தை விற்பனை செய்ததில் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. யாரோ ஒருவர் கொடுத்த அழுத்தத்தின் பெயரில்தான், அதை துணிந்து செய்துள்ளனர். தற்போது அதை வருமானவரித் துறை அதிகாரிகள் முக்கிய ஆவணமாக கைப்பற்றி இருப்பதாக கூறப்படுவதால் மேலக்கரூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகளும் வருமானவரித் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் வரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தவிர அவர்கள் முறைகேடு செய்தது உறுதியாகி விட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்களது வேலையும் பறிக்கப்பட்டு விடும். இதனால் அங்கு பணிபுரியும் அத்தனை அதிகாரிகளும் இப்போது பதற்றத்தில்தான் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பத்திர பதிவுத்துறைக்கு சிக்கல்?!!

அதேநேரம் அப்படி பதிவு செய்யும்படி நெருக்கடி கொடுத்தவர்களை அவர்களால் அடையாளம் காட்டவும் முடியாது. அது அவர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.

இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும்போது,” இதுபோன்ற முறைகேடுகள்
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், பணபலம் மிக்கவர்கள் போன்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே நடந்துகொள்ளும் அதிகாரிகளும், ஊழியர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இதில் அதிகாரம் மிக்க அரசியல் பிரமுகர்கள் குறைந்த விலைக்கு நிர்ணயம் செய்தது தொடர்பான பத்திரப்பதிவுகள் வருமானவரித் துறையினரின் கையில் கிடைத்தால் அவர்களின் பாடும் சிக்கல்தான்.
ஏனென்றால் வரி ஏய்ப்பு செய்வதற்கு அவர்களும் உடனடியாக இருந்துள்ளனர்
என்ற குற்றச்சாட்டு பாயும்.

அதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிபுரிவோர் இனி இதுபோன்ற பெரிய தவறுகளை செய்ய தயங்குவார்கள் என்று நம்பலாம்” என்கின்றனர். அரசியல் நோக்கர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கவே செய்கிறது!

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…