திராவிட மாடல் பிரிவினையை தூண்டுதா? சிறுபான்மையினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CM ஸ்டாலின்!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2024, 2:43 pm
திராவிட மாடல் பிரிவினையை தூண்டுதா? சிறுபான்மையினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CM ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் ” எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எடுப்பது என்று இல்லாமல் மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது.
பிறப்பிற்கு பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கும் சொந்தக்காரர்களான அவர்கள் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதை விட நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது, இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க திராவிட மாடல் அரசு சட்டம் இயற்றியது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல், தர்காவிற்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.10,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.46 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக மின்மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காஜிகளுக்கு மாதம்தோறும் ரூ. 20,000 மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.