மீண்டு(ம்) வந்த ட்ரம்ப்.. பங்குச்சந்தை முதல் பாய்ச்சல் வரை!

Author: Hariharasudhan
6 November 2024, 7:44 pm

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்-க்கு மோடி முதல் பல உலகத் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வாஷிங்டன் டிசி: அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், மொத்தம் உள்ள 538 எலெக்டோரல் வாக்குகளில் அதிபராக வெற்றி பெறுவதற்குத் தேவையான 270க்கும் மேலான எலெக்டோரல் ஓட்டுகளைப் பெற்று இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய, அமெரிக்காவின் 47வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியினரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் களம் கண்டனர்.

இந்த கடுமையான போட்டியில் வெல்லப் போவது யார் என்ற நிலையில், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு அதிபர் இருக்கையில் அமர்ந்த ட்ரம்ப், 2020ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார். இதனால் ஜோ பைடன் அதிபரானார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் I’m back என்ற கெத்துடன் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இந்த வெற்றியையடுத்து, “இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் இந்நாட்டு மக்களை நிச்சயம் பெருமை கொள்ளச் செய்வோம். ஏனென்றால் எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும்” என தனது வெற்றி உரையை நிகழ்த்தினார்.

மேலும், இது குறித்து ஃபுளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்க்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம்முடைய பொறுப்பு. எலானைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Modi and Trump

இவ்வாறு அமெரிக்க அதிபர் தேர்தல் உலக அளவில் சில பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வைத்தது. ஆனால், இன்று ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எட்டிவிட்டது. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராகி உள்ளார்.

இந்த நிலையில், இந்திய வணிகங்களை ட்ரம்பின் வெற்றி கணிசமாக பாதிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வரி மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடு குறித்த ட்ரம்பின் தீவிர நிலைப்பாடு, தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், ஜவுளி மற்றும் உலோகங்கள் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொழில்துறை, பாதுகாப்பு போன்ற துறைகள் அதிக மறைமுக விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கடும் அமளிக்கிடையே மீண்டும் 370வது பிரிவு நிறைவேற்றம்.. ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் களேபரம்

இதனிடையே, ட்ரம்பின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “நண்பர் டொனால்ட் ட்ரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில், உங்களது முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய மற்றும் மூலோபய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை மீண்டும் வழங்குவதற்கு நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒன்றாக பாடுபடுவோம்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டொனால்ட் ட்ரம்ப் ஆகிய உங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள், அமெரிக்க அதிபராக 2வது முறையான உங்களின் பயணத்திற்கு எனது வாழ்த்துகள். கமலா ஹாரிஸின் எதிர்கால திட்டங்களுக்கு நல்லபடியாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 526

    0

    0