அண்ணாமலை குறித்து கேள்வி கேட்காதீங்க… அடிப்படையே தெரியாதவர்கள் பற்றி பேச விரும்பவில்லை : இபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 8:52 pm

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினர் தொடர்பாக வெளியிட்ட சொத்துப் பட்டியல் குறித்தும், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தபோது, அவர் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவர் வெளியிடட்டும் பார்க்கலாம்” என்றார்.

கர்நாடக மாநில தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாளை அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து நாளை கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்” என்றார்.

அப்போது அதிமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் டிடிவி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக அன்றைய தினமே பல்வேறு செய்திகளை வெளியிட்டது.

எனவே, அவருக்குச் சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்” என்றார்.

அண்ணாமலை மறைமுகமாக அதிமுகவை விமர்ச்சிக்கிறாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார்.

எனவே அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனக்கு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? என்று தெரியும். அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.

வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். எனவே, தயவுசெய்து ஊடங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 356

    0

    0