உயிரை பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களை ஏமாற்றாதீர்கள் : திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 6:37 pm

மருத்துவர்களின் சேவைகளை மதித்தும், சமூகநீதியை கருத்தில் கொண்டும் 1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் போது, 2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தது 100 நாட்கள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்திருக்கும் போதிலும், அதன்படி கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆள்தேர்வு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

தமிழ்நாடு இதுவரை மொத்தம் நான்கு கொரோனா அலைகளை கடந்து வந்திருக்கிறது. அவற்றில் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் நீடித்த இரண்டாவது அலை தான் மிகவும் கொடியதாகும்.

இரண்டாவது அலையில் தொற்று மிகவும் கடுமையானதாக இருந்தது. பெரும்பான்மையினருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. தமிழகத்தில் இரண்டாவது அலையில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 19 லட்சத்துக்கும் கூடுதலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் மருத்துவப் பணியாற்றியது மிகவும் சவாலானது ஆகும். தங்களின் குடும்பத்தினரை மாதக்கணக்கில் பிரிந்திருந்து, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.

செவிலியர்களை பணியமர்த்தும் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழக அரசு, மருத்துவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காததும், அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்க மறுப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
மருத்துவர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதற்கு பிந்தைய 7 மாதங்களில் இதுவரை ஏராளமான திருத்தங்களை செய்துள்ள மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், அனைவரும் எதிர்பார்க்கும் இந்த திருத்தத்தை மட்டும் செய்ய மறுக்கிறது.

தமிழக அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி மருத்துவர்கள் நியமனம் கடந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நிறைவடைந்திருக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளால் பல மாதங்கள் தாமதமாக கடந்த 25.04.2023-ஆம் நாள் தான் மருத்துவர்கள் நியமனத்திற்கான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதனால், இப்போதும் கூட மத்திய அரசு பரிந்துரைத்தவாறு கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஆணை பிறப்பிக்கலாம். மருத்துவர்களின் சேவைகளை மதித்தும், சமூகநீதியை கருத்தில் கொண்டும் 1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 336

    0

    0