ஆளுநருடன் அனுசரணை… முதலமைச்சரின் முடிவு சறுக்கலா? சாதுர்யமா?

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 8:12 pm

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலினின் முடிவு சறுக்கலா அல்லது சாதுர்யாமா?

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்தவுடன், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த மாதம் இறுதியில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், உயர்கல்வித் துறை பொறுப்பை வகித்து வந்த மூத்த அமைச்சர் பொன்முடி அதிரடியாக மாற்றப்பட்டார்.

அவருக்கு வனத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி.செழியன் பதவி ஏற்றார். முக்கியத்துவம் வாய்ந்த அதுவும் தொடர்ச்சியாக உயர் கல்வித் துறை அமைச்சராகவே இருந்த பொன்முடி, பதவி இறக்கம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் வனத் துறைக்கு மாற்றப்பட்டார். இது விழுப்புரம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அமைச்சர் பொன்முடிக்கு இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் உயர்கல்வித் துறை செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த கோ.வி.செழியன், “ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முறையான நெறிமுறைப்படி மாணவர்கள் நலன்காக்க எவற்றை செயல்படுத்த வேண்டுமோ அவற்றை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் எனக்கு அறிவுரை கூறியுள்ளார் என்று போட்டு உடைத்தது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் கூறியதாவது : மாநில உரிமை, தமிழக கல்வி நிலை, உயர்கல்விக் கொள்கைகளை முன்வைத்துதான் ஆளுநருடனான எனது தொடர்புகளும் செயல்பாடுகளும் இருக்கும். ஆளுநருடன் முட்டல் மோதல்களை தமிழக அரசு என்றைக்கும் உருவாக்கிக் கொள்வது இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் என்றைக்கும் நட்புணர்வோடு உயர்கல்வித் துறையும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் உறுதுணையாக இருப்போம்.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என நிரூபிக்க வேண்டும். பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கடந்த காலங்களில் ஆளுநர் – உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. சட்டசபையில் ஆளுநர் உரையை பாதியில் விட்டு அவர் கிளம்பிய போது வெளியே போ என பெரும் சத்தமிட்டது அமைச்சர் பொன்முடி என்பதை அனைவரும் அறிவார்கள். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பொன்முடி புறக்கணித்து வந்தார். உயர்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆளுநர் விமர்சித்து வந்தார்.

சறுக்கல் முடிவா : சாதுரிய முடிவா?

முதல்வர் திடீரென ஆளுநருக்கு கவரி வீசி இருப்பது சறுக்கல் முடிவா …இல்லை சாதுரிய முடிவா ..என்ற கேள்வி அரசியல் களத்தில் எழும்பி உள்ளது. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியது எங்களுக்கு தலையாயக் கொள்கை என மார்பு தட்டிய திமுகவினர் திடீரென ஆளுநருக்கு ஆதரவு கொள்கை வீசி இருப்பது ஆச்சரிய பட வைக்கிறது.

காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்களை பார்த்த கவர்னர் அரசியல் செய்கிறார் என சட்டத்துறை அமைச்சராக ரகுபதி எழுப்பிய தீ அணைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் போட்ட முதல்வர், ஆளுநருக்கு எதிராக வழக்கு போட்ட முதல்வர் ,ஆளுநர் தான் ஒரு ஆட்சியின் தலைமை நிர்வாகி என்பதை இப்போது புரிந்து இருப்பது அரசியல் விமர்சர்களை வரவேற்கச் செய்திருக்கிறது. இதன் பின் கோவிசெழியன் அமைச்சராக பதவி ஏற்ற பின்பு துணை முதல்வர் உதயநிதி, ஆளுநர் ஆர் .என்.ரவி தலைமையில் சென்னையில் பட்டமளிப்பு விழா கல்வியில் கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்றனர். அப்போதே சுமூகமான முடிவு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஏற்கனவே ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடிக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு இருப்பது போல ஒருவரை மாதிரி ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்கு கடைப்பிடித்து வந்ததால் உயர் கல்வித் துறை மோசமானது. பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் கல்லூரி கல்விதத்தளித்து வருகிறது.

நிரந்தரமான பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், அரசு சட்டக் கல்லூரிகளை இழுத்து மூடுவது நல்லது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்கள், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகள் முதல்வரின்றி செயல்படுவதாகவும்,15 சட்டக் கல்லூரிகளில் 19 இணை மற்றும் 70 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சட்டப் படிப்பைத் தன் எதிர்காலமாக தேர்ந்தெடுக்க துடிக்கும் நமது எதிர்கால தலைமுறையினரின் கனவுகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் 4 அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே மருந்தியல் கல்லூரிகள் உள்ளன .

அக்கல்லூரிகளில் 6 பேராசிரியர் மற்றும் 16 இணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. மேலும், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000-க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளது .

இதை ஈடுகட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்பு தட்டிக் கொள்கிறார்.

ஆனால் உங்கள் ஆட்சியில் தமிழக அரசுக் கல்லூரிகள் ஆசிரியர்களின்றி தத்தளிக்கிறது. இதற்கு தீர்வு குறித்து அரசு ஆய்வு செய்த போது தான், ஆளுநர் உடன் தொடர்ந்து மோதல் போக்கு இருப்பதால் உயர் கல்வித்துறை கரைந்து சென்றது.

கவனிப்பாரின்றி தடம்புரண்டு கிடக்கும் தமிழக உயர்க் கல்வித்துறையின் சிக்கல்களைக் களைந்து, தமிழக மாணவர்களின் தரமான எதிர்காலத்தை தர அரசு இந்த முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது தான்.

காலம் போன பின்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஞானம் உதயமாயியுள்ளது. பார்லிமென்ட் தேர்தலில் முதல்வர் தனது பிரச்சாரத்தை ஆளுநர் வீட்டில் இருந்து தொடங்கியதாக கூறினார். தற்போது பாஜக உடன் நெருக்கமான சூழ்நிலையை ஆளுநரிடமிருந்து அவர் தொடங்கி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் முதல்வர் தனது முடிவிலிருந்து தொடர்ந்து பின் வாங்கி வருவது. முதல்வரின் நடவடிக்கையில் சறுக்கல் என்று கூறுவதா இல்லை. வரும் சட்டசபை தேர்தலுக்கு சாதுரியமான முடிவு என்று கூறுவதா என்று குழப்பம் நீடிக்கிறது.

முதல்வர் பாஜக பக்கம் தொடர்ந்து சாய்ந்து வருவது திமுக கூட்டணியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் நெருங்கும்போது தெரியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். உயர் கல்வித் துறை அமைச்சரின் கூற்று விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 195

    0

    0