கமலுக்கு காங்.தலைவர் வைத்த குட்டு : பிரிவினையை உருவாக்காதீர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2022, 8:22 pm
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த இந்துக்கள் பற்றிய சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை.
முதல்வர் அட்வைஸ்
இந்துக்களை மிகவும் அவதூறாகப் பேசியதற்காக அவர் அனைவராலும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலினே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு விஷயம் குறித்து பேசும்போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுமளவிற்கும் அது சென்றது.
பொன்னியின் செல்வன் சர்ச்சை
இந்த நிலையில்தான், மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவல் திரைவடிவம் பெற்று கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வசூலையும் அள்ளி குவித்து வருகிறது. அதேநேரம் அதையொட்டிய சர்ச்சைகளும் ஒரு வாரமாக வலம் வருகிறது. சோழர் வரலாற்று கால திரைப்படமான பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன் மன்னராவதற்கு முந்தைய கால சூழலை விளக்குகிறது.
வெற்றிமாறன் போட்ட குண்டு
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், ”சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
சினிமாவில் இப்படி நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நமது விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள்
அவருடைய இந்த கருத்து கடும் விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. வெற்றி மாறன் சொன்னது சரிதான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசன் எம்எல்ஏ,, நாராயணன் திருப்பதி, மற்றும் சமூக ஆர்வலரான நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் இதற்கு தொடர்ந்து கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினையை மேலும் விஸ்வரூபம் ஆக்கும் விதமாக இந்து சமய அறநிலையத் துறையை, சைவ சமய அறநிலையத் துறை என்றும் வைணவ சமய அறநிலையத் துறை என்றும் இரண்டாக பிரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தி ட்விட்டரில் ஒரு பதிவையும் வெளியிட்டார்.
இதற்கும் பாஜக தலைவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நமது பண்டைய புராணங்கள் மற்றும் வேத நூல்களில் இந்து மதம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே திருமாவளவன் கூறுவது ஏற்க முடியாத ஒன்று என்று ஆன்மீக குருமார்கள் இந்துக்கள் அமைப்பின் தலைவர்கள் விரிவான விளக்கமும் அளித்து வருகின்றனர்.
இப்படி இந்து மதம் குறித்து இரு தரப்பிலும் மாறி மாறி பதில் கருத்தை பதிவிட்டு வருவதால் தமிழக அரசியல் களத்தில் இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறிவிட்டது.
கமல் சொன்ன கருத்து
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், ராஜ ராஜன் காலத்தில் இந்து என்ற பெயர் இல்லை என்பதால் வெற்றிமாறன் கூறிய கருத்து சரிதான் என்றார். கமலஹாசனின் கருத்துக்குப் பின் தேசிய அளவில் இந்த விவகாரம் சூடு பிடித்து உள்ளது.
இந்த, இந்து சர்ச்சைக்கு இதுவரை காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், அக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங், நடிகர் கமலுக்கு ஒரு குட்டு வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் குட்டு
அவர் கூறும்போது, “கமலஹாசனின் கருத்து அர்த்தமற்ற ஒன்று. சிவன் ஆதி காலத்தில் இருந்த இந்து கடவுள். ஸ்ரீநகர் தொடங்கி ராமேஸ்வரம் வரை அவரை மக்கள் வழிபடுகின்றனர். தஞ்சை பெரிய கோவில் என்ற பிரம்மாண்டத்தை கட்டிய மன்னன் ராஜராஜ சோழன் ஒரு இந்து தான்.
சைவர்களை இந்துக்கள் இல்லை என்று கூறுவது, ஒருவரை பார்த்து இவர் கத்தோலிக்கர்தான். ஆனால் கிறித்துவர் அல்ல என்று சொல்வதைப் போன்றது. எனவே, இந்து மதத்தில் சைவம், வைணவம் என பிரிவினையை உருவாக்க வேண்டாம்” என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாஜக வளர்வதால் வயிற்றெறிச்சல்
“வெற்றிமாறன், திருமாவளவன், சீமான், கமலஹாசன் போன்றோர் ராஜ ராஜ சோழன் இந்து அல்ல என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது, தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதை கண்டு பயப்படுவதால்தான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கமலஹாசன் இளம் வயதில் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது 1973-ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசன் நடிப்பில் ராஜ ராஜ சோழன் என்ற திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படம் வெளியான காலகட்டத்தில் கூட கமலஹாசன் இப்படி சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால், சீமான், திருமாவளவன் போன்றோரிடம் அந்தப் படம் எந்தவொரு காலகட்டத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது இவர்கள் அரசியல்வாதிகள் ஆகிவிட்டதால் ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் அல்ல என்று சொல்கிறார்கள்.
4 பேர் கண்களை மட்டுமே உறுத்துகிறது
அதுவும் ஒருமுறை இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமலஹாசன், தான் சொன்னதையும் மறந்துவிட்டார். அப்போது மட்டும் இந்து என்ற வார்த்தையை எப்படி அவர் பயன்படுத்தினார்?
அதேபோல வெற்றிமாறன் எந்தக் கல்லூரியில் படித்தார் என்பதை நன்றாக கூர்ந்து நோக்கினாலே அவர் எதற்காக இப்படிச் சொன்னார் என்பதை புரிந்துகொள்ள முடியும். உண்மையிலேயே தமிழகத்தில் முன்பு எப்போதையும் விட கடந்த ஒரு வருடத்தில் பாஜக அபார வளர்ச்சி கண்டிருப்பது இந்த நான்கு பேரின் கண்களையும் உருத்துகிறது. அதனால்தான் ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட கிளப்பி விட்டு தமிழக மக்களிடம் பாஜக பற்றி மறைமுகமாக ஒரு பீதியை ஏற்படுத்துகின்றனர்.
மறைமுகமாக பிரிவினைவாதமும் பேசுகிறார்கள்.
சிதைக்க முயற்சிப்பது நியாயமா?
ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் தமிழகம் இருந்த நிலை வேறு. இப்போது உயர்கல்வி பெறுவதில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதனால் எது தவறு? எது சரி? என்பதை அவர்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப சமூக ஊடகங்களும் நாட்டு நடப்பை உடனுக்குடன் தெரிவிக்கின்றன. அதனால் கமல், சீமான், திருமா என்னதான் சொன்னாலும் தமிழகத்திலுள்ள 85 சதவீத இந்துக்கள் இவர்கள் சொல்வதை அப்படியே நம்பி விட மாட்டார்கள். ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்பதை இவர்கள் உணரவேண்டும்
தவிர இந்து என்பது இந்தியாவில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள் பின்பற்றும் தொன்று தொட்ட வாழ்க்கை நெறி முறை, ஆன்மீக நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை சிதைக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நியாயம் அல்ல” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.