குரலை அடக்கலாம் என நினைக்காதீர்கள்… மன்னிப்பு கேட்க முடியாது : உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2023, 9:40 pm
தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தி.மு.க.வின் மூத்த வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்துள்ளதாகவும், இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நோட்டீஸ்க்கு அண்ணாமலை தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு அண்ணாமலையின் குரலை அடக்கும் முயற்சி என்றும், உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.