பணம் வேண்டாம்… நிலம்தான் வேண்டும் : என்எல்சி அதிகாரிகளிடம் கெஞ்சி கதறிய விவசாயிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2023, 5:45 pm
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க பணிகளை விரிவு படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் நெய்வேலி வானமாதேவி கிராம பகுதியில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்களை அழித்து சுரங்கப்பாதைக்கான வாய்க்கால் தோண்டும் பணியில் என்எல்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் என்எல்சி முற்றுகை போராட்டத்தினை பாமக நடத்தியது.
இப்போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து வாய்க்கால் தோண்டும் பணிகளை என்எல்சி நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
இதனிடையே என்எல்சி சுரங்கத்தில் பயன்படுத்தியது போக உபரியாக உள்ள தண்ணீர் விவசாயப் பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த தண்ணீரை என்எல்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என்எல்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையினால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்வாய் தோண்டும் பணியை மீண்டும் இன்று என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. நிலத்தை அளவிட்டு பணியை தொடங்கிய என்எல்சி அதிகாரிகளிடம் விவசாயி ஒருவர் தனது நிலத்தை அளவீட நீங்கள் யார் என்று வாக்குவாதம் செய்தார்.
இன்னொரு பெண் விவசாயி ஒருவர், அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டபடி, நீங்கள் தரும் பணம் வேண்டாம், தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நிலம் தான் வேண்டும் என்று கதறியழுதார்.
விவசாயிகளின் குமுறல்களை கேட்ட அதிகாரிகள் அங்கிருந்த புறப்பட்டு சென்றனர். ஆனால் விளை நிலங்கள் வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.