இதுதான் கடைசி வாய்ப்பு.. மொத்த ஃபார்மும் நாளை மாலைக்குள் என்கிட்ட இருக்கனும் : கட்சியினருக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு
Author: Babu Lakshmanan4 February 2023, 2:15 pm
அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக அவைத்தலைவர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர். மேலும், பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், இந்த இடைக்கால உத்தரவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியது.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சார்பில் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனையும் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். தற்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், அதிமுக அவைத் தலைவருமான தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, வேட்பாளர் தேர்வு படிவத்தை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது :- ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து, அதனை நாளை இரவு 7 மணிக்குள், சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் என்னிடம் சேர்த்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.