நேருக்கு நேர் மோதும் இபிஎஸ் – ஓபிஎஸ்… இரட்டை இலை சின்னம் யாருக்கு..? பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர்…!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 8:40 am

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2 அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக வருகிற 30-ந்தேதி முறையிடுங்கள், நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி இன்று தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள்.

மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தங்களுக்கு சாதகமாக உள்ள விஷயங்களை அலசி ஆராய்ச்சி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். எனவே, இன்றைய வழக்கு விசாரணை நடைபெறும்போது கடுமையான ஆட்சேபங்களை தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…