15 தொகுதிகளில் இழுபறி?… உளவுத்துறை அறிக்கையால் திமுக அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 7:12 pm

15 தொகுதிகளில் இழுபறி?… உளவுத்துறை அறிக்கையால் திமுக அதிர்ச்சி!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்பும் கூட தேர்தல் களம் அனல் பறந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக 39 தொகுதிகளையும் தட்டி தூக்கி விட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர களப்பணியாற்றியது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ இம்முறை கவுரவமான வெற்றியை பெற்று விடவேண்டும் என்பதை இலக்காக கொண்டு தேர்தலை சந்தித்தது. இன்னொரு பக்கம் தமிழக பாஜக வலுவான மூன்றாவது அணியை அமைத்து திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பலத்த சவாலை அளித்தது.

இந்த நிலையில்தான் தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் எத்தனை சதவீதம் என்பது பற்றி ஒரு பெரும் சர்ச்சையே வெடித்தது.

கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த ஒன்றரை மணி நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு 39 தொகுதிகளிலும் தோராயமாக 72.09 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவித்தார். எனினும் அடுத்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவு 12 20 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் யார் கூறிய வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும், குழப்பத்தையும்
ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவீதம்தான் அதிகாரப்பூர்வமானது என்ற தகவல் ஏப்ரல் 20 ம் தேதி மாலை வெளியாகி இப் பிரச்சனைக்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதன் மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவானதை விட தற்போது மூன்று சதவீத வாக்குகள் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 73.63 சதவீத ஓட்டுகளுடன் ஒப்பிட்டால் நான்கு சதவீத வாக்குகள் வரை குறைந்திருப்பதும் தெரியும். இது ஆளும் கட்சியான திமுகவுக்கு லேசான கலக்கத்தையும், பீதியையும் ஏற்படுத்தி விட்டுள்ளது, என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் கடந்த தேர்தலை விட அதிக சதவீத அளவில் ஓட்டுகள் பதிவாகி அதில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கைப்பற்ற நேர்ந்தால் எங்களுக்கு மக்கள் மகத்தான வெற்றியை அளித்துள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையோடு கூறுவதற்கு வாய்ப்பு இருந்தது.

ஆனால் இப்போதோ மூன்று சதவீதம் குறைந்திருப்பதால் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள், அதனால் தான் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை, இது திமுக அரசுக்கு ஒரு பின்னடைவுதான் என்ற வாதம் எழக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில்தான் திமுகவையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் அதிர்ச்சி அடைய செய்யும் அளவிற்கு தமிழக உளவுத்துறை எடுத்துள்ளதாக கூறப்படும் ரகசிய சர்வேயில் 15 தொகுதிகளில் மிகக் கடுமையான போட்டியை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்கொண்டுள்ளன என்பது தெரியவந்து இருக்கிறது.

இவற்றில் ஐந்து தொகுதிகளில் மட்டுமே இழுபறியான நிலையில் வெற்றி வாய்ப்புள்ளது. மற்ற 10 தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நூலிழை அளவில் வெற்றியை தட்டிப்பறித்து விடலாம் என்ற நிலைதான் காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக தலைமை தனது ‘பென்’ என்ற அமைப்பு மூலம் 39 தொகுதிகளிலும் எடுத்த இன்னொரு சர்வேயிலும் இதேபோன்ற தகவல்தான் கூறப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஓட்டு போட்டவர்களிடம் திமுக எடுத்த கருத்துக்கணிப்பிலும் இதே ரிசல்ட்தான் வந்துள்ளதாக தெரிகிறது.

அந்த இழுபறி 15 தொகுதிகள் பட்டியலில் தென் சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு,பொள்ளாச்சி, திருப்பூர், விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், தேனி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் மிக அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48%, கள்ளக்குறிச்சியில் 79.25%,
நாமக்கல்லில் 78.16%, வாக்குகளும் மற்ற 12 தொகுதிகளில் குறைந்த அளவிலேயே ஓட்டுகளும் பதிவாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக உளவுத்துறையும், திமுக அமைப்பும் எடுத்ததாக கூறப்படும் ரகசிய சர்வே வாக்கு எண்ணிக்கையின்போது உறுதியாகிவிட்டால் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் பொறுப்புகளை கவனித்துக் கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளன.

ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை அங்கு போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி, தனக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் வேலை பார்க்காமல் எதிரணியில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சருக்கு மறைமுகமாக தீவிரக் களப்பணி ஆற்றினார் என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலினிடம் போன் மூலம் வேதனையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல கோவை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி தொகுதிகளை கவனித்துக் கொண்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீதும் கண்டனக் கணைகள் பாய்ந்து உள்ளன, என்கிறார்கள்.

இதற்கிடையே அதிமுகவும், பாஜகவும் இந்த இழுபறி தொகுதிகளில் தங்களுக்கு குறைந்த பட்சம் 7 தொகுதிகளாவது கிடைத்து விடும் என்று கணக்கு போடுகின்றன.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “தென் சென்னை, கோவை
பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர்,விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 10 தொகுதிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக அதிமுக தலைமை கருதுகிறது. இதில் ஏழு தொகுதிகளில் நிச்சய வெற்றி என்று அக் கட்சி உறுதியாக நம்பவும் செய்கிறது.

பாஜக தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக தென் சென்னை, கோவை, நெல்லை, தர்மபுரி, வேலூர்,ராமநாதபுரம், தேனி,நாமக்கல் ஆகியவற்றை பார்க்கின்றன. இவற்றில் 7 தொகுதிகளை கைப்பற்றி விட முடியும் என்று பாஜக கருதுகிறது.

இந்த இரு கட்சிகளும் போடும் கணக்கின்படி பார்த்தால் 12 தொகுதிகள் மட்டுமே அவற்றின் இலக்காக உள்ளன. இதன் மூலம் தங்களுக்கு மற்ற மூன்று தொகுதிகளில் வெற்றி கிடைக்கப் போவதில்லை என்பதை அதிமுகவும், பாஜகவும் ஒப்புக்கொள்வது போலவே இருக்கிறது.

மேலும் படிக்க: கேரள மக்கள் இந்த முறை BJPயை ஏமாற்ற மாட்டார்கள்…. எனக்கு நம்பிக்கை இருக்கு ; அண்ணாமலை பேச்சு!!

என்றபோதிலும் 2017ம் ஆண்டு முதலே வலுவான கூட்டணியை கொண்டிருப்பதால் அதை வைத்தே 39 தொகுதிகளையும் கைப்பற்றி விட முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்.

அதேநேரம் கடந்த தேர்தலை விட 6 சதவீதம் வரை வாக்கு பதிவு குறைந்துள்ள சிவகங்கை, மதுரை தொகுதிகளிலும் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கூற முடியாத நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஜூன் 4-ம் தேதி வரை ஆவலோடு காத்திருப்போம்!

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!