‘திராவிட மாடல்’ ஆட்சி விவகாரம்… காங். எம்பியால் வெடித்த சர்ச்சை… அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
29 March 2022, 7:37 pm

திராவிட மாடல்

சமீபகாலமாகவே திராவிட மாடல் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மனம் விட்டு நிறைய பேசி வருகிறார்.

“தமிழகத்தில் அனைத்து சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் திமுக-வின் திராவிட மாடல்.

நமது அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், அனைவருக்குமானதொரு
ஓர் அரசாக இருக்கும் என்பதை முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே சொல்லி வருகிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் மக்களின் அரசாக இது இருக்கும். இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது குறித்து ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசும்போது “கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது. உள்ளாட்சியில் பெண்களுக்கு தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். இது திராவிட மாடல் புரட்சியாகும். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாகவும் இந்த வெற்றியை பார்க்கிறேன்” என்றார்.

கூட்டணி கட்சிகள் மவுனம்

மிக அண்மையில் ஸ்டாலின் வெளியிட்ட சுயசரிதை புத்தக விழாவிலும் இந்த திராவிட மாடல் வளர்ச்சி குறித்தே திமுக தரப்பில் அதிகம் பேசப்பட்டது.

ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மாநில தலைவர்கள் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி குறித்து வரவேற்போ, எதிர்ப்போ தெரிவித்து இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் கூறவில்லை.

மாறாக, அதிமுகவும், பாஜகவும் இதுபற்றி தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

அதிமுக விமர்சனம்

அதிமுக தலைமையோ,”மத்திய அரசுக்கு ஒன்றிய அரசு என்று புதுப்பெயர் சூட்டுவது, ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்வது, திடீரென மத்திய அரசு எங்களின் உற்ற நண்பர் என்று அந்தர்பல்டி அடிப்பது, இப்படியான கோமாளி கூத்துகளுக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா.?

கள்ள ஓட்டுப் போட வந்த கிரிமினல் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தால், ஒப்படைத்தவர் மீதே அடுக்கடுக்காய் வழக்கு போட்டு உள்ளே வைப்பதும், பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளோடு நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கிரிமினல் பேர்வழியை வழியனுப்பி வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்புகிறது.

பாஜக விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Annamalai Stalin - updatenews360

இது தான் திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதலமைச்சர் பொய்யை மட்டுமே கூறிக் கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என காட்டமாக விமர்சிக்கிறார்.

பஞ்சாப் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி வெற்றி கண்டுள்ள ஆம் ஆத்மியோ
“டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமான பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தைத்தான் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்துகிறது. எனவே இனி திராவிட மாடல் ஆட்சி எடுபடாது. டெல்லி மாடல்தான்” என்று மார் தட்டுகிறது.

காங்கிரஸ் சரவெடி

இந்த நிலையில்தான் திராவிட மாடல் ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தன் பங்கிற்கு ஒரு சர வெடியை தற்போது கொளுத்தி போட்டிருக்கிறார். அவருடைய அந்தப் பேச்சு திமுக தலைமையை டென்ஷனுக்கு உள்ளாகியிருக்கிறது.

Karthi Chidambaram - Updatenews360

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொருளாதார வீழ்ச்சியால் இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனை தருகிறது. அங்கு நடக்கும் ஆட்சி முழுக்க சிங்களர்களின் குடும்ப ஆட்சி. ஒரே குடும்பத்திடம் முழு அதிகாரமும் உள்ளது. பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழர்கள் இந்தியாவை நோக்கி அகதிகளாக வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து அந்த நிதி பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள மக்களுக்கு மட்டுமே சென்றடையாமல் நமது தமிழ் மக்களுக்கும் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும்.

திராவிட மாடல் என்ன?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறேன். ஸ்டாலின் ஆண்டிற்கு ஒரு முறையல்ல, 3 முறை சென்று அங்குள்ள வளர்ச்சி, தொழில், மற்றும் அங்கு வாழும் தமிழர்களை சந்திக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு பயன்படும். ஆனால், செல்வி ஜெயலலிதா, நடிகையாக இருந்தபோது வெளிநாடு சென்றவர் முதலமைச்சரான பிறகு ஒருமுறை கூட வெளிநாடு செல்லவில்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். பெண்களை காம பொருட்களாக ஆண்கள் பார்க்க கூடாது.

Karthi Chidambaram stalin - Updatenews360

திராவிட மாடல் என்ன? என்பதற்கு அறிஞர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று
ஒரு போடு போட்டார்.

இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

கடுப்பில் திமுக

இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “முந்தைய அதிமுக அரசின் எல்லா திட்டங்களையும் திமுக அரசு அப்படியே பின்பற்றி வருகிறது. எனவே இது அதிமுக மாடல் ஆட்சிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கிண்டலடித்து வருகிறார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தினமும் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், ‘இந்திய அளவிற்கு திமுக ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருப்பது திமுக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிஜம்.

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மறைமுகமாக மோதிய கரூர் எம்பி ஜோதிமணி திமுக அரசுக்கு எதிராக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை.

அதைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு, நீட் தேர்வை நான் ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறப் போய் திமுக தலைவர்களிடம் கார்த்தி சிதம்பரம்
செமத்தியாக வாங்கி கட்டிக் கொண்டார். தற்போது அவரால் காங்கிரசுக்கு இன்னொரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அதிருப்தி பேச்சு..

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள மாடல் வளர்ச்சி நாட்டிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, என்கிறார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது மாநிலத்தில் நடக்கும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் ஆட்சிதான் நாட்டிலேயே மிகச் சிறந்தது என்கிறார். இதேபோல மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோரும் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

அதனால் 60 ஆண்டு காலம், நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் பற்றி யாரும் பெருமையுடன் கூற மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் கார்த்தி சிதம்பரம் இப்படி கருத்து தெரிவித்து இருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலும் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுவது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது என்பதாலும் அல்லது தமிழக காங்கிரசை திமுக தலைவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற விரக்தியினாலும் கூட மனம் நொந்து போய் அவர் இப்படி கூறியிருக்கலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

  • AR Rahman wife health issues சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?
  • Views: - 1336

    0

    0