போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது… பட்டியலை எடுத்த என்சிபி அதிகாரிகள்… தமிழகத்தின் முக்கிய பிரபலங்களுக்கு சிக்கல்..?
Author: Babu Lakshmanan9 March 2024, 12:14 pm
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி என்சிபி அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, மேற்கு டெல்லியில் உள்ள குடோனில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அதேபோல, கடந்த 2 ஆண்டுகளில் 4,500 கிலோ போதை ரசாயனங்களை கடத்தியது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஜாபர் சாதிக்கின் கைது தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கைதாகக் கூடும் என்று தெரிகிறது.