கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவமும்.. ஜாபர் சாதிக்கும்… என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் பகீர் தகவல்…?
Author: Babu Lakshmanan7 March 2024, 12:16 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவான கருதப்படும் ஜாபர் சாதிக், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி கொடுத்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரையும், அவரது சகோதரர்களான முகமது சலீம், மைதீன் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் நிதியுதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வந்த அரபிக்கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்வதில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுத பயிற்சி அளிக்க நிதியுதவி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.