அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு விநியோகம்… முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2024, 11:16 am
அம்மா உணவங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிந்தது.
அந்த மாவட்டங்களில் மழை குறைந்து பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டது.
தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.