துரை வைகோ அடித்த ‘U Turn’ : “சீட் இல்லேன்னாலும் வெளியேற மாட்டோம்”!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 9:24 pm

துரை வைகோ அடித்த ‘U Turn’ : “சீட் இல்லேன்னாலும் வெளியேற மாட்டோம்”!!

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுக தலைமையுடன் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சை முடித்துவிட்டன.

இந்த கட்சிகள் எல்லாமே 2019 தேர்தலில் போட்டியிட்டதை விட தங்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு தொகுதிகளாவது கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்துவதால் பங்கீட்டு பேச்சு திருப்திகரமாக அமையவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

இதற்கிடையே திமுக கூட்டணியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எங்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது ஒதுக்கவேண்டும் என்று திமுக தலைமையிடம் திடீர் கோரிக்கை வைத்தன.

இதில் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் நன்றாக தெரியும். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் பத்து நாட்கள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுவிட்டு பிப்ரவரி 7ம் தேதி சென்னை திரும்புவதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் இந்த கட்சிகள் தங்களது குரலை ஓங்கி ஒலித்தன.

அதேநேரம், ஸ்டாலின் சென்னை வந்து தரையிறங்கியதும் கூடுதல் தொகுதிகள் கேட்டவர்கள் தங்களது சுதியை அப்படியே குறைத்துக் கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாயே திறக்கவில்லை. கப்சிப் ஆகிவிட்டன.

தமிழக காங்கிரஸ் குறைந்தபட்சம் தங்களுக்கு 12 தொகுதிகளாகவது தரவேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பதாலும் அதற்கு திமுக தலைமை சம்மதிக்காததாலும் அக் கூட்டணியின் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்குவதில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

ஒரு பொதுத் தொகுதியும் மூன்று தனித் தொகுதியும் கண்டிப்பாக எங்களுக்குவேண்டும் என்று அடம்பிடித்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. மூன்று சீட் கொடுத்தால் போதும். அதில் ஒன்று பொதுத் தொகுதியாக இருக்கட்டும் என்று சற்று இறங்கி வந்துள்ளார்.

மிக அண்மையில் விசிகவில் இணைந்து துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் திருமாவளவன் பொதுத் தொகுதியே கேட்கிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

நான்கு எம்பி சீட்கள் கேட்ட மார்க்சிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்ட்டும் சென்ற தேர்தலில் போட்டியிட்ட இரண்டு இடங்கள் எங்களுக்கு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்து விட்டன.

இதேபோல் திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், ஈரோடு தொகுதிகளை திமுக தலைமையிடம் கேட்டிருந்த மதிமுக எங்கள் கட்சிக்கு திருச்சி தொகுதியையும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் ஒதுக்குங்கள் என்று தன்னுடைய நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மிக அண்மையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ இன்னும் ஒரு படி மேலே போய் பெரிதாக U Turn போட்டார்.

அவர் கூறும்போது, “திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கிறோம். 2024 ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது, தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதற்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம்.

மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக, மதிமுக கூட்டணி எற்படுத்தப்பட்டது. எங்களது கூட்டணி வெறும் எம்பி, எம்எல்ஏ சீட்டுகளுக்காக மட்டும் உருவானது அல்ல.

யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற மத்திய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் கடும் நெருக்கடி கொடுக்கிறது. 2024 தேர்தலில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.

கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு இருக்கிறோம். எக் காரணம் கொண்டும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட்களை கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்” என்று அதிரடி காட்டினார்.

எங்களுக்கு மதிமுகவின் எதிர்காலம் தான் முக்கியம், கட்சிக்கான அங்கீகாரத்தையும், தேர்தல் சின்னத்தையும் தக்க வைப்பதற்காக எங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு எம்பி சீட்டுகளாவது கொடுங்கள் எனது திமுகவிடம் மன்றாடிய மதிமுக இப்போது நாடாளுமன்ற எம்பி சீட்டே கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. அதற்காக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறுவது தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய பிறகுதான் திமுக கூட்டணி நிகழ்ச்சிகள், சற்று அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம் தொகுதியை மட்டுமே ஒதுக்கினால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டது என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் இப்படி திடீர் குட்டிக்கரணம் போடுவதற்கு என்ன காரணமாக இருக்கும்?…. அரசியல் பார்வையாளர்கள் கூறுவது இதுதான்.

“2019 தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்டுக்கு15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் தேர்தல் நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து 5 மாதங்களுக்கு பின்பு இந்த தகவல் தெரிய வந்தது என்றாலும் கூட தமிழக அரசியலில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்போது திமுக எதிர்க்கட்சியாகத்தான் இருந்தது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே இரு கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுக்க முடிகிற அளவுக்கு திமுக பண பலத்துடன் இருந்துள்ளது என்றால்?… இப்போது ஆளும் கட்சியாக உள்ள நிலையில் எவ்வளவு கொடுக்கும்? என்பதுதான் கேள்வியாக எழுந்து இருக்கிறது.

இதனால் கூட்டணி கட்சிகள் திமுக தலைமை தங்களுக்கு இதை விட பல மடங்கு தொகையை தேர்தல் நன்கொடையாக கொடுக்கும் என்று உறுதியாக நம்புகின்றன. ஒருவேளை இண்டியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட்டால் தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவியை திமுக பெற்றுக் கொடுத்து விடும் என்றும் அவை கணக்கு போடுகின்றன.

தவிர 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களுக்கு கூடுதல் தொகுதிகள் தருகிறோம் என்று சில கட்சிகளை திமுக சமாதானப்படுத்தியும் இருக்கிறது, என்கிறார்கள்.

அதேநேரம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினிடம்தான் இருக்கிறது என்றாலும் கூட அமைச்சர் உதயநிதியும், அவருடைய மைத்துனர் சபரீசனும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் இருவரும் மனது வைத்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தல் போல சீட் கிடைக்குமா? கிடைக்காதா?… என்பதை உறுதியாக கூற முடியும். ஏனென்றால் முதலமைச்சரின் மகனும், மருமகனும் திமுக குறைந்தபட்சம்
25 எம்பி சீட்டுகளிலாவது வெற்றி பெற்றால்தான் நாடாளுமன்றத்தில் வலிமையான கட்சியாக திகழ முடியும் என்று கருதுகின்றனர்.

இந்த விவரங்களை எல்லாம் திமுக தலைமை, கூட்டணி கட்சிகளிடம் ரகசியமாக எடுத்துக் கூறி அவைகளை சமாதானப்படுத்தியும் விட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் மட்டும்தான் சோனியா, ராகுல், கார்கே மூவரையும் கேட்காமல் எங்களால் எந்த முடிவுக்கும் வர முடியாது என்று இழுத்தடித்து வருகிறது.

திமுக ஐந்தாறு தொகுதிகளை மட்டும் ஒதுக்கினால் தமிழகத்தில் நாம் தனித்தே போட்டியிடுவோம் என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் இதனால்தான் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் அது அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு உள்ளது.

ஆகவேதான் துரை வைகோ போன்றவர்கள் எங்களுக்கு சீட்டே ஒதுக்காவிட்டாலும் கூட நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என்று பேச ஆரம்பித்து இருக்கின்றனர். இப்படி திமுக கூட்டணியில் உள்ள எல்லா சிறு கட்சிகளும் சொல்ல ஆரம்பித்தால் காங்கிரசின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். காங்கிரசார் கொள்கை பிடிப்பில்லாதவர்கள். நாட்டைப் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எம்பி சீட் மட்டும்தான் முக்கியம் என்ற கடும் விமர்சனங்களும் இதனால் எழும்.

இது காங்கிரசை பணிய வைக்க திமுக மேற்கொள்ளும் ஒரு புதிய யுக்தியாகவே பார்க்கப்படுகிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முயற்சி பலிக்குமா? மில்லியன் டாலர் கேள்விதான்!

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 360

    0

    0