அடிக்கடி கோட்டை விடும் துரைமுருகன்! CM ஸ்டாலினுக்கு தலைவலி?

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 7:15 pm

60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ள அமைச்சர் துரைமுருகன் 85 வயதை கடந்து விட்டதாலோ, என்னவோ எதைப் பற்றி அவர் பேசினாலும் அது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே மாறிவிடுகிறது. கிண்டலடித்து பேசுவதில் அவரை மிஞ்சுவதற்கு தமிழகத்தில் யாருமே கிடையாது என்னும் பெருமைக்குரியவர் என்றாலும் கூட பல நேரங்களில் அவருடைய நக்கல் பேச்சு கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

இப்படி அடுத்தடுத்த சில நாட்களில் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கள் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கண்டனத்துடன் சுட்டிக்காட்டும் நிலைமையையும் அவருக்கு மட்டுமின்றி திமுக தலைமைக்கும் தலைவலியை ஏற்படுத்திவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

கடந்த 17ம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ஓரிடத்தில் மணியம்மையை பெரியார் கூட்டிக்கொண்டு போனார் என்று குறிப்பிட்டார். அவருடைய இந்த பேச்சு நாளிதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் அதுவும் பெரியாரை நன்கு அறிந்தவரே இப்படி பேசலாமா? இதனால் திமுகவுக்குத்தானே அவப் பெயர் ஏற்படும் என்பதை
கி வீரமணி சுட்டி காட்டிய பின்புதான் துரைமுருகனுக்கு, தான் பேசியதே தவறு என்று புரிந்தது என்கிறார்கள். எனினும் இதற்குள் ஐந்து நாட்கள் கடந்து போய்விட்டது.

வருத்தம் தெரிவித்த அமைச்சர்

இது தொடர்பாக துரைமுருகன் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில்,
“வேலூருக்கு பிரச்சாரத்துக்கு வந்த தந்தை பெரியார் மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த பெரியார் கழகப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார்.

எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார்.
இது பொருந்தா திருமணம் என்று திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார். இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம்.

இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன். “அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கும் “கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர், அண்ணன் வீரமணிக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

ஒரு வார்த்தையை கையாளும் போது, அதை தவறாக பயன்படுத்தினால் அதன் அர்த்தம் எப்படி மாறிப் போய் அனர்த்தம் ஆகிவிடும் என்பது, இதன் மூலம் அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கொங்கு மண்டல பகுதிகளில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கண்டன அறிக்கையும் கேலிப் பொருளாக மாறிப்போனது.

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜர் கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற 12 அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த தவறான குற்றச்சாட்டு.

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடனா அணை, ராமநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை , பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோவில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, என 40 அணைகள் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனை இது. இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டுகள் யாவும் புஸ்வானமாகிவிடும்” என்று கடுமையாக தாக்கி இருந்தார்.

இதற்கு அண்ணாமலையிடமிருந்து சுடச்சுட பதில் வந்தது. அதில் குற்றச்சாட்டு வைக்கும் முன்பு அது உண்மையா என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் துரை முருகன் கூறியதற்கு பதிலடி கொடுப்பது போலவும் அமைந்து இருந்தது.

அண்ணாமலை பதிலடி

அண்ணாமலை தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், “என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, மடத்துக்குளம் சட்டப் பேரவை தொகுதியில், கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக வெறும் ஐந்து அணைகளையே கட்டியுள்ளது என்று பேசியிருந்தேன். அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள், திமுக நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கொங்கு பகுதியில் ஐந்து அணைகள் என்று நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்.

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் துரைமுருகன் அவர்கள், அவசர கதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்பது வருத்தத்தைத் தருகிறது. மேலும் திமுக கட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றையும் திமுகவினர் திருத்த மறந்து விட்டார்கள் என்பது, அண்ணன் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது” என்று கிண்டலடித்து உள்ளார்.

காட்பாடி கிடைக்குமா?

“இந்த இரு விவகாரங்களுமே, அமைச்சர் துரைமுருகனுக்கு இறங்கு முகமாகவே தென்படுகிறது. இதனால் அவருடைய மகன் கதிர் ஆனந்துக்கு மீண்டும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான். அதேபோல அடுத்த சட்டப் பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியை துரைமுருகனுக்கு ஒதுக்காமல் திமுக கல்தா கொடுக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் துரைமுருகன் மூலம் எழும் பிரச்சினைகள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவலியையும் ஏற்படுத்திவிடுகிறது. திமுகவின் பொதுச்செயலாளர் என்பதாலும், கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதாலும் அவரை தனிப்பட்ட முறையிலோ பொதுவெளியிலோ கண்டிப்பது ஸ்டாலினுக்கு கடினமாக உள்ளது என்பதும் உண்மை” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“பெரியாரைப் பற்றி கூறும்போது அமைச்சர் துரைமுருகன் தவறான அர்த்தம் வரும் விதமாக பேசி இருக்கிறார் என்பதை அப்போது மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலினும் கேட்டு வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தார் என்றும் நிகழ்ச்சி முடிந்ததும், இதை தவிர்த்திருக்க வேண்டும் என்று துரைமுருகனிடம் கூறினார் எனவும் தற்போது திமுக தரப்பில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

வீரமணியை சமாளித்த முதலமைச்சர்?

இதை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் முதலமைச்சர் கூறியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதை உண்மை என நம்புவதற்கு கடினமாக உள்ளது.
ஏனென்றால் ஸ்டாலின் இதை அமைச்சர் துரைமுருகனிடம் நிகழ்ச்சி முடிந்த கையோடு கூறியிருந்தால் அவர் பதறிப் போய் உடனடியாக வருத்தம் தெரிவித்து இருப்பார் என்பதை உறுதியாக கூற முடியும்.

ஆனால் அமைச்சர் துரைமுருகன் பேசியதை சமூக ஊடகங்கள் பரவலாக விமர்சிக்க தொடங்கிய பிறகு ஐந்து நாட்கள் கழித்துதான் வருத்தமே தெரிவிக்கிறார். அதனால் வீரமணியை சமாளிப்பதற்காக முதலமைச்சரால் சொல்லப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் போலவே தற்போது வெளியாகி உள்ள செய்தியை கருதத் தோன்றுகிறது.

அதுவும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, திமுகவினருடன் இணைந்து திராவிடர் கழகத்தினர் பணியாற்ற மாட்டார்கள் என்கிற தகவல் பரவிய பின்புதான் இந்த செய்தியே வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக, ஒரு விஷயத்தை பேசும் முன்பு அது உண்மையா என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும் என அண்ணாமலைக்கு துரைமுருகன் அட்வைஸ் செய்கிறார். ஆனால் அணைகள் கட்டிய விஷயத்தில் கொங்கு மண்டல பகுதியில் திமுக ஆட்சியில் ஐந்து அணைகள்தான் கட்டப்பட்டன என்று அண்ணாமலை கூறியதை அமைச்சர் துரைமுருகன் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தமிழக முழுவதும் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு அவரை கடுமையாக சாடி இருக்கிறார்.

ஸ்டிக்கர் ஒட்டிய துரைமுருகன்

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் காமராஜர் உயிரோடு இருந்த வரை அவரை மனதார ஒரு முறையாவது பெருந்தலைவர் என்று துரைமுருகன் அழைத்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். மாறாக அவரை கேலி செய்து பேசியதுதான் அதிகம். ஆனால் இப்போதோ பெருந்தலைவர் என்று புகழாரம் சூட்டுகிறார். பரவாயில்லை, மாற்றம் நல்ல முன்னேற்றம்தான்.

ஆனால் காமராஜர் கட்டிய 12 அணைகளுடன் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளை ஒப்பீடு செய்து பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் காமராஜர் கால அணைகள் எல்லாமே பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலங்கள் பாசன வசதி பெறக்கூடியவை. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளில் பெரும்பாலானவை சில ஆயிரம் ஏக்கர்கள் மட்டும் பாசன வசதி பெறும் சிறிய அளவிலான தடுப்பு அணைகள்தான் என்று கூறுவார்கள்.

அதேநேரம் அதிமுக ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பு அணைகளையும் தங்களது ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது போல துரைமுருகன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும் வேடிக்கையாக இருக்கிறது” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பழுத்த அரசியல்வாதியான அமைச்சர் துரைமுருகன்
தடுமாறி பேசுவது புரியாத புதிராகத்தான் உள்ளது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 405

    0

    0