புதிய சிக்கலில் அமைச்சர் பொன்முடி… ?பினாமிகளை சுற்றி வளைக்கும் ED… பீதியில் சீனியர் அமைச்சர்கள்…!

Author: Babu Lakshmanan
21 July 2023, 8:00 pm
Quick Share

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் விசாரணை நடத்திய நிலையில் அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி மூன்று நாட்கள் விசாரணைக்காக அவர்களிடம் நேரில் ஆஜராகவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

தந்தையும், மகனும் செம்மண் குவாரி மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய 28 கோடி ரூபாய் வருவாயை இழக்கச் செய்ததாக கூறப்படும் வழக்கையே தங்களுக்கு கிடைத்த அஸ்திரமாக அமலாக்கத்துறை கையில் எடுத்து இருவருக்கும் வசமாக ‘செக்’ வைத்து விட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடியின் வீட்டில் கணக்கில் கட்டப்படாத 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இங்கிலாந்து நாட்டின் பவுண்ட் கரன்சியையும் கைப்பற்றியதோடு வங்கிகளில் அவர் வைப்புத் தொகையாக போட்டு வைத்திருந்த 42 கோடி ரூபாயை முடக்கவும் செய்தனர்.

இதுதவிர பொன்முடியும் அவரது மகன் கௌதம சிகாமணியும் இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் சட்ட விரோதமாக பல நிறுவனங்களில் தொழில் முதலீடு செய்திருப்பதையும், அதில் 100 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதையும் அமலாக்கத்துறை போட்டு உடைத்தது.

அதேபோல இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேலான கேள்விகளுக்கு ஆம், இல்லை பாணியில் பதிலையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்தான் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவருடைய ஆடிட்டர் தரப்பில் செம்மண் குவாரி விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி குவாரி மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான வரவு செலவு கணக்குகள் அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை ED அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. இதற்கு காரணம் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் பினாமிகள் மூலம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுவதுதான்.

மேலும் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதார, ஆவணங்கள் போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அமலக்கத்துறைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

ஏனென்றால் அவர்கள் கைப்பற்றிய ஆவணங்களுக்கும், விசாரணை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்களுக்கும் அமைச்சர் பொன்முடி தரப்பிலான ஆவணங்களுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் காணப்படுகின்றன என்கிறார்கள்.

மேலும் செம்மண் குவாரி மோசடி வழக்கில் 2007ம் ஆண்டு பொன்முடிக்கும், தெய்வீக சிகாமணிக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஐந்து பேர் அடுத்த நான்காண்டுகளில் அவர்களின் பினாமிகளாகவே மாறிவிட்டதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மூலமாகத்தான் இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் தந்தையும், மகனும் நீண்ட காலம் தொழில் முதலீடுகளை செய்து வந்துள்ளனர் என்பதையும் ED உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்த பினாமிகள், பரம்பரை பணக்காரர்கள், தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் வழியாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதன் அடிப்படையில் அவர்கள் யாருக்காக இப்படி தொடர்ந்து முறைகேடான நடவடிக்கைகளில் இறங்கினர் என்பதையும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களாக திரட்டி விட்டனர்.
இதனால் இவர்கள் ஐந்து பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர ED முடிவு செய்து இருக்கிறது.

ஆனால் தலைமறைவாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தனக்கும் இதயத்தில் பிரச்சனை இருப்பதாக கூறி அமலாக்கத்துறையிடம் ஆஜராவதற்கு 4 வார கால அவகாசம் கேட்டது போல அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி இருவரின் பினாமிகள் என்று கருதப்படுபவர்களும் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் அமலாக்கத்துறைக்கு வந்துவிட்டது.

அதனால் விரைவிலேயே அவர்களின் வீடுகள் அலுவலகங்கள் மற்றும் உறவினரின் வீடுகள், அவர்களது நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் திடீர்
ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரும், அவருடைய மகனும் இந்த ஐந்து பினாமிகள் வழியாகதான் ஆஸ்திரேலியா, மலேசியா, மொரிஷியஸ் இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனையின் மூலம் தொழில் முதலீடுகளை செய்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில் இவர்களும் அமலாக்கத்துறையின் கிடுக்குப் பிடியில் சிக்கினால் இதில் வேறு எந்த சீனியர் அமைச்சர்களுக்காவது தொடர்பு இருந்தால் அதுவும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் அனைவரின் வயிற்றிலுமே இது புளியை கரைத்துவிட்டு இருக்கும் என்பது நிச்சயம்.

அதேநேரம் பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 82 லட்ச ரூபாய் மற்றும் 13 லட்ச ரூபாய் வெளிநாட்டு கரன்சி ஆகியவை லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணமா?
என்பது குறித்தும் அந்த ஐந்து பினாமிகளிடமும் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தும் வாய்ப்பும் உள்ளது. கை மாறியது லஞ்சம்தான் என்பது உறுதி செய்யப்பட்டால் அது அமைச்சர் பொன்முடியை சிறைக்குள் தள்ளும் என்பது நிச்சயம் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பொன் முடியையும், அவருடைய மகன் கௌதம சிகாமணியையும் அமலாக்கத்துறையிடம் சிக்க வைத்ததே அவர்களுக்கு நெருக்கமான ஒரு சிலர்தான் என்றும் கூறப்படுகிறது. அந்த கருப்பு ஆடுகள் யார்? என்பதுதான் தற்போது திமுக தலைமைக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக அமலாக்கத்துறையினரால் முடக்கப்படும் சொத்துக்களை அவர்களால் ஆறு மாதங்கள் வரை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். 

தவிர, எந்தக் குற்றத்திற்காக சொத்துக்கள் முடக்கப்பட்டன என்பதை ஆறு மாதங்களுக்குள் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அமலாக்கத்துறையிடம் இருந்து சொத்துக்கள் விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் தேசிய தீர்ப்பாயத்தில் மனு அனுப்பி விடுவிக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற்றுவிடலாம். அதேநேரம் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடும்.

2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் முடிய 3010 வழக்குகளும், விசாரணைகளும் நடத்தப்பட்டு அமலாக்கத்துறையால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தவிர அந்த சொத்துக்களில் பலவற்றை விற்றதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால் முடக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்காக போலியான ஆவணங்களை ஒருவர் தாக்கல் செய்தது உறுதி செய்யப் பட்டால் அவரை கைது செய்து
7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அமலாக்க துறையால் முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் முடக்கிய பணத்தை அமலக்கத்துறையிடம் இருந்து மீட்பதற்கு பெரும்பாலான தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் உண்மையே!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 347

    0

    0