‘ED விசாரணைக்கு போகக் கூடாது’… அதிகாரிகளுக்கு உதவியாளர் கொடுத்த நெருக்கடி… அமைச்சர் துரைமுருகன் தான் அடுத்த டார்க்கெட்டா…?

Author: Babu Lakshmanan
27 November 2023, 6:45 pm

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று தமிழக அதிகாரிகளுக்கு அமைச்சரின் உதவியாளர் நிர்பந்தம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்ததாகவும், இதனால் பலகோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மேலும் மணல் அதிபர் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த சோதனைகளில் போலி பில் வைத்து மணல் அள்ளப்பட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த சோதனைக்கு பிறகு, அடுத்தகட்டமாக, விசாரணைக்காக ஆஜராகும்படி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலக்காத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை எனக் கூறிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், சம்மன் அனுப்ப முடியாது ” என்று வாதிட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.4,500 கோடி சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு உதவியாகத்தான் ஆவணங்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று நீர்வளத்துறை அதிகாரியை அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் உமாபதி நிர்பந்தித்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பினர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டதாகவும், சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அனுமதி அளித்ததன் மூலம் தவறு செய்து விட்டோம் என்று அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், மணல் மாஃபியா, தமிழக அரசிடம் இருந்து பாதுகாக்கவே அதிகாரிகளின் பெயரை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஏற்கனவே, திமுக பிரமுகர் குடியாத்தம் குமரன் அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையின் மூலம் 60 ஆயிரம் கோடி சம்பாரித்து விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று நீர்வளத்துறை அதிகாரியை அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் மிரட்டியிருப்பது பெரும் சந்தேகத்தை எழச் செய்துள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் இந்த விளக்கம் அமைச்சர் துரைமுருகனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகன் அடுத்து சிக்குகிறாரா..? என்ற பேச்சுக்கள் அடிபட்ட வண்ணம் உள்ளன.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 427

    0

    0