டிசம்பருக்குள் ED, ITயின் அடுத்த இலக்கு? பதை பதைப்பில் 7 அமைச்சர்கள்…
Author: Udayachandran RadhaKrishnan15 November 2023, 9:26 pm
கடந்த மே மாதம் முதல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என இரு தரப்பினரும் திமுக அமைச்சர்களையும், நாடாளுமன்ற எம்பிக்களையும் குறி வைத்து அவர்களது வீடுகள், கல்வி மற்றும் கட்டுமான நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள்,நெருக்கமான தொழிலதிபர்களின் அலுவலகங்கள் என ஒவ்வொரு மாதமும் ரெய்ட் நடத்துவது வாடிக்கையாகி விட்டதால் திமுக தலைமை மிகவும் அதிர்ந்துதான் போயிருக்கிறது.
அடுத்தடுத்த ரெய்டு : திமுக கலக்கம்
இது அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கை, அதை சட்டப்படி எதிர் கொள்வோம் என்று என்னதான் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக தலைவர்கள் மோடி அரசை கடுமையாக தாக்கினாலும் கூட கோடிக் கணக்கில் பிடிபடும் ரொக்க பணம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிஏய்ப்பு போன்றவை தமிழக மக்களிடையே திகைப்பையும் இவ்வளவு சொத்துக்களை ஏன், எதற்காக, எப்படி இவர்கள் சம்பாதித்தார்கள்? என்னும் சிந்தனைகளையும் கிளறி விடுகிறது.
நாங்கள் முறைப்படி வருமான வரி செலுத்தி வருகிறோம் என்று இவர்கள் சாக்கு போக்கு கூறினாலும் 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சாதாரண நபர்களாக இருந்த இவர்களுக்கு மலைபோல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் குவிந்தது எப்படி?… தங்களது பதவி, அதிகாரங்களை வைத்துதானே இவர்கள் இதை சம்பாதித்திருக்கவேண்டும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் எழுகின்றன.
வருமானவரித்துறையும், அமலாக்கத் துறையும் நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் ரெய்டில் இறங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
எனினும் இவர்கள் சோதனைகள் இறங்குகிறார்கள் என்றால், அதை எப்படியாவது முன் கூட்டியே மோப்பம் பிடித்து ED, IT அதிகாரிகளுக்கு அல்வா கொடுக்கும் அரசியல்வாதிகளும் உண்டு.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி எம்பி, அடுத்ததாக ஜெகத்ரட்சகன் எம்பி, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை EDயும், ITயும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி விட்டது.
அமலாக்கத்துறையின் அடுத்த குறி
தாராள பணப்புழக்கம் கொண்ட இலாக்காக்களை வைத்துள்ள 3 அமைச்சர்கள் மற்றும் இரண்டு எம்பிக்கள்தான் இதுவரை ரெய்டுகளில் சிக்கியுள்ளனர். என்றபோதிலும் இந்தப் பட்டியல் நீளுவதற்கான வாய்ப்பும் அதிகம். டிசம்பர் மாத இறுதிக்குள் மேலும் சில அமைச்சர்கள், எம்பிக்கள் இதுபோல் பலத்த சோதனைக்கு உள்ளாகலாம் என்று தெரிகிறது.
ரெய்டில் சிக்கிய இந்த ஐந்து பேரையுமே இரண்டு மண்டலங்களாக பிரித்து விடலாம்.
குறிப்பாக இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு மற்றும் எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி நால்வரும் வடக்கு மண்டலத்துக்குள் வருபவர்கள்.
இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்து ரெய்ட் நடத்தப்படும் மண்டலங்களாக மத்திய மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.
இந்த வரிசையில் மத்திய மண்டலத்தில் சீனியர் அமைச்சர் கே என் நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தென் மண்டல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, ப மூர்த்தி ஆகிய ஐவரும் குறி வைக்கப்படலாம் என்கிறார்கள்.
அதேபோல வடக்கு மண்டலத்தில் 55 ஆண்டுகளாக திமுகவின் அதிகார மையமாக திகழும் மூத்த அமைச்சர் துரைமுருகன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோரும் ED, IT துறைகளின் ரேடார் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் 7 பேருமே கலக்கத்தில் உள்ளனராம்.
இந்த தகவல்கள் எல்லாமே திமுக தலைமைக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சில அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நீங்கள் மிகுந்த கவனமாக இருங்கள், எந்த நேரத்திலும் உங்களை நோக்கி ரெய்டு வரலாம் என்று எச்சரித்ததன் பின்னணி என்கிறார்கள்.
“இப்படி மத்திய விசாரணை அமைப்புகள் தீவிர ரெய்டில் இறங்குவதற்கு, முக்கிய காரணமே அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவருடைய தம்பியும்தான்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“கடந்த மே மாத இறுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் கரூர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது ஒரு பெண் அதிகாரி திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டதில் அவருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. மேலும் ஐந்து அதிகாரிகள் பலத்த காயமும் அடைந்தனர்.
இதேபோல ஜூன் மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேரடி விசாரணையில் இறங்கியபோது அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக தன்னை ED அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இழுத்து சித்ரவதை செய்தார்கள் என்று ஒரு பகீர் குற்றச்சாட்டையும் வைத்தார். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை அவரிடம் நடத்திய விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அமலாக்கத்துறையினர் அதை மறுக்கவும் செய்தனர்.
விசாரணைக்கு சென்ற எந்த அதிகாரிகள் மீதும் இந்திய அளவில் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் இப்படி கொடூர தாக்குதலை நடத்தியது இல்லை என்பதால்தான், அதை தங்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மத்திய விசாரணை அமைப்புகள் திமுக அமைச்சர்கள், எம்பிக்களிடம் தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுமே எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பார்கள், சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் இதில் அவர்களை மிஞ்சுவதற்கு யாருமே கிடையாது என்பதும் அந்த அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
தவிர கடந்த ஆறு மாதங்களாக, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தும் இருக்கிறது. அதனால் அவர் பிடிபடும் வரை அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் அதிரடி சோதனையில் தொடர்ந்து ஈடுபடும் என்பது வெளிப்படையாக தெரிகிற விஷயம். ஏனென்றால் இதை ஒரு கௌரவ பிரச்சினையாகவும் ED கருதுகிறது. அதனால்தான் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவினர் கூறுவதை ஏற்க முடியவில்லை.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், இண்டியா கூட்டணியின் தேர்தல் செலவுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை திமுக கொடுக்க தயாராக இருக்கிறது என்று கூறப்படும் நிலையில்தான் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான ரெய்டுகளை அரசியலுடன் இணைத்து அறிவாலயம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழகத்திலும் தேர்தல் செலவுக்காக பயன்படுத்த திமுக திட்டமிட்டு இருந்த வழிகளை EDயும்,ITயும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகின்றன. டிசம்பர் மாத இறுதிக்குள் நான்கு மண்டலங்களிலும் உள்ள வழிகள் அனைத்தும் திடீர் ரெய்டுகளால் முற்றிலுமாக அடைக்கப்பட்டு விடும்.
இந்த கோபத்தில்தான் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளை காட்டமாக விமர்சிக்கின்றன” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவும் யோசிக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!
0
0