‘ஜாமீன் மட்டும் கொடுக்காதீங்க’… தம்பியை வைத்து செந்தில் பாலாஜிக்கு செக் ; அமலாக்கத்துறையின் அடுத்த திட்டம்…!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 1:52 pm

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதினாலேயே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று திமுகவினர் எதிர்பார்த்துள்ள நிலையில், இன்று அவரது ஜாமீன் மனு மீதான பதில் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளன

ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணையை உடனடியாக தொடங்க நாங்கள் தயார் என விசாரணை நீதிமன்றத்தில் கூறிவிட்டோம். சகோதரர் அசோக் குமாரும் தலைமறைவான நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 344

    0

    0