நேற்று நல்லா இருந்தாரு… இன்னைக்கு இப்படி இருக்காரு… நீதிபதி முன்பு மருத்துவ அறிக்கை மீது சந்தேகத்தை கிளப்பும் அமலாக்கத்துறை..!!
Author: Babu Lakshmanan14 June 2023, 7:30 pm
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரத்த நாளங்களில் 3 அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் முறையிட்டனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனைக்கே வந்து நீதிமன்ற காவலை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நீதிபதி அல்லியை நேரில் அனுப்பி விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்பேரில், மருத்துவமனையில் 6,084 எண் கொண்ட அமைச்சரின் அறைக்கே சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, செந்தில் பாலாஜியை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கக்கோரி நீதிபதியிடம் வழக்கறிஞர் இளங்கோ மனு தாக்கல் செய்தனார். இருதரப்பினரும் வாதம் செய்த நிலையில், மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிபதி அல்லி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பதாக உத்தரவிட்டதுடன், ஜாமீன் தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் தொடருவார்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி ஆணையிட்டார்.
இந்நிலையி்ல், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாதத்தின்போது அமலாக்கத்துறை கூறியதாவது:- செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. நீதமன்ற காவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும். ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை.
செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். இன்று திடீரென உடல்நலக் குறைவு என்கிறார். மருத்துவமனை அறிக்கையில் சந்தேகம் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையை அமலாக்கப் பிரிவே வழங்கும். வருமான வரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக்கணக்கில் அதிக பணம் உள்ளது. செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ரூ.1.34 கோடியும், மனைவி பெயரில் ரூ.29.55 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பணம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் காரணமில்லாமல் வாய்தா வாங்கினார், என அமலாக்கத்துறை வாதிட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டி தொடரப்பட்ட மனு மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.