செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அதிரடி… கரூர், கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை..!!
Author: Babu Lakshmanan3 August 2023, 10:52 am
கரூர் ; கரூர், கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் வழக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்து, அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள சங்கரின் வீடு மற்றும் அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் ஆலை, அம்பாள் நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல, கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் வீட்டில் 10க்கும் மேற்பட்ட CRPF போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.