அமலாக்கத்துறையில் பிடியில் சிக்குகிறாரா மணல் அதிபர் ராமச்சந்திரன்…? ரெய்டுக்கு பிறகு அதிகாரிகள் கொடுத்த ஷாக்..!!!
Author: Babu Lakshmanan14 செப்டம்பர் 2023, 1:50 மணி
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட மணல் அதிபர் ராமச்சந்திரனை, கஸ்டடியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை அரசிடம் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இவர் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் மணல் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மணல் விற்பனையில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடைபெற்று, அதன் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கதுறைக்கு ஆதாரங்கள் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், புதுக்கோட்டையில் உள்ள ராமச்சந்திரன் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர் நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது சோதனையை தொடங்கினர். படிப்படியாக சோதனைகள் நிறைவு பெற்றது.
மூன்றாவது நாளாக இன்றும் அவருடைய அலுவலகத்தில் மட்டும் சோதனை நடைபெற்று வந்தது. தற்போது அந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் மணல் விற்பனையில் செய்த முறைகேடு தொடர்பான ரசீது புத்தகங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு, ஒரு இனோவா கார் முழுவதும் பண்டில் பண்டலாக அவை ஏற்றப்பட்டன.
தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய தொழிற்படை, காவல்துறையினர் பாதுகாப்போடு அவற்றை காரில் ஏற்றி புறப்பட்டனர். சோதனை நடைபெறும் போது ராமச்சந்திரன், அவருடைய வீடு மற்றும் அலுவலகத்திற்கு வரவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக அவரை வரவழைப்பதற்கு அமலாக்கத்துறை கடந்த இரண்டு தினங்களாக முயற்சி செய்தனர்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், தற்போது தங்களுடைய சோதனையை நிறைவு செய்து, ஆவணங்கள், ஆதாரங்கள், ரசீது புத்தகங்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை அள்ளிச் சென்றுள்ளனர்.
தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நாளை அல்லது நாளை மறுநாள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராமச்சந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
0
0