அமலாக்கத்துறை விரித்த வலை : தப்பிய அமைச்சரின் தம்பி? சிக்கிய மாஜி அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 7:56 pm

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறை கண்டு கொள்ளவில்லை.

அதிமுகவிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலரையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

வீட்டு வசதி துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, தனியார் நிறுவனத்திற்குக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் உள்ளது. இதையொட்டி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகச் சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை தனியே ஒரு வழக்குப் பதிவு செய்து சோதனையிட்டு வருகிறது.

தஞ்சை ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை செய்தனர்.

மேலும், சென்னை தி.நகரில் உள்ள அவரது மகன் அலுவலகம், அசோக் நகரில் உள்ள அவரது மகன் வீடு, இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை அசோக் நகரில் 3 மணி நேரத்திற்கு பிறகு அலுவலகத்தை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ஒரே இடத்தில் செயல்படும் 6 நிறுவன அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. ஊழியர்கள் மூலம் சாவி கொண்டுவரப்பட்டு அலுவலகத்தை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

ஒரத்தநாடு வைத்திலிங்கம் உறவினர் வீட்டில் யாரும் இல்லாததால் உறவினர்களை வைத்து பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நேற்றிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை விவகாரங்கள் எடப்பாடியை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

இது குறித்து நாம் விசாரித்தபோது, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் எடப்பாடிக்கும் எல்லாமுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனின் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்ட் கல்லூரியில், இளங்கோவன் மற்றும் அவரது மகன் பீரவின் குமார் ஆகியோரின் தலைமையில் மறைமுக நிர்வாகம் இயங்கி வருகிறது. நேற்று முதல் திருச்சி வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது.

அமைச்சரின் தம்பி எங்கே?

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரான போதும் அவரது தம்பியை அமலாக்கத்துறை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொண்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.

அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்தது . இதனால் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்,என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் இடம் உள்ளது.
இந்த இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்தனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்து இடத்தையும் அளவீடு செய்யப்பட்டன.
மேலும் கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்து மீண்டும் அமைச்ராகி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் அசோக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அமலாக்கத் துறையில் தேடப்படும் குற்றவாளியாகவே அவர் கருதப்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணன் செந்தில் பாலாஜியும், தம்பி அசோக்குமாரும் கரூரில் நள்ளிரவில் ஒரு ஓட்டலில் சந்தித்து பேசி கொண்டதாக வதந்திகள் பரவி உள்ளன. பல வழக்குகளில் சுறுசுறுப்பு காட்டும் அமலாக்கத்துறை அசோக்குமார் விஷயத்தில் மெத்தனம் காட்டுவது வியப்பை ஏற்படுத்துகிறது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: உன்னை விட்டால் யாருமில்லை என்று பாஜகவின் முழு ஊது குழலாக மாறிய ஓபிஎஸ் தனது நெருங்கிய ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்தியலிங்கத்தையே காப்பாற்ற முடியவில்லை. இவர் எப்படி கட்சிக்காரர்களை காப்பாற்ற போகிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சூழலில் திமுக கூட்டணியின் பலத்தை எதிர்கொள்ள வேண்டுமாயின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற குரல்கள், பல மாதங்களாகவே எதிரொலித்து வந்தன. சசிகலா, ஓபிஎஸ் உள்பட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் சீனியர் தலைவர்கள் 6 பேர், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதை ஆணித்தரமாக மறுத்த ஈபிஎஸ், இணைக்கச் சொன்னவர்களிடம் மீண்டும் கொத்தடிமைகளாக சசிகலா ,தினகரனுக்கு இருக்கப் போகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். பிரிந்தவர்கள் பிரிந்தவர்கள்தான் ,அவர்கள் இணைய வாய்ப்பில்லை என்றார்.

அதே போல, அதிமுகவை பலமாக்கி அக்கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக தலைமையும் கடும் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடன் கூட்டணி இல்லை. நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கமுடியாது என்று மறுத்து வருகிறார். இதனால் அதிமுகவில் எடப்பாடிக்கு எதிரான அணி பலம் பெற்று வருகிறதாம். அதேசமயம் பாஜக தலைமையிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தையும் எடப்பாடி பழனிசாமி பொருட்படுத்துவதில்லையாம். இந்த சூழலில், அவருக்கு எதிரான ஆட்டத்தை பாஜக தலைமை தொடங்கி இருக்கிறது.

ஓபிஎஸ் தலைமையின் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்படலாம் என்ற முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. இதற்காக, எடப்பாடி பழனிசாமியிடம் இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையையும் வைத்தியலிங்கம் நடத்தியிருப்பதாக பாஜக தலைமைக்கு தகவல் தரப்பட்டு அது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழல்களின் பின்னணியில் தான் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது,என்று விவரிக்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்.

பாஜகவை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், கூட்டணி கணக்கில் விளையாடத் தொடங்கியிருக்கிறது டெல்லி. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை கண்டுபிடிக்க முடியாமல் அமலாக்கத்துறை திணறுவது நடிப்பா இல்ல திமுகவின் மீது உள்ள பிடிப்பா என்று தெரியாமல் உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை எந்த வழக்கு பதிவு செய்தாலும் ஒரு நகலை அமலாக்க துறைக்கு அனுப்பி விடுகிறது. இதனடிப்படையில் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. சோதனையில் பல உள்நோக்கம் இருப்பது தெரியாமல் இல்லை. ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா என்பது மக்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இரண்டு வருடங்களாக ஒரு அமைச்சரின் தம்பியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அமலாக்கத்துறை சோதனைகள் பலிக்குமா… இல்லை வேதனையில் ஜொலிக்குமா என்பது அமலாக்கத்துறைக்கு வெளிச்சம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!