சாதிப் பெயரை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய ED.. பின்னணியில் பாஜக பிரமுகர்.. பிரபல அரசியல் கட்சி கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2023, 5:11 pm
சாதிப் பெயரை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய ED.. பின்னணியில் பாஜக பிரமுகர்.. பிரபல அரசியல் கட்சி கண்டனம்!
சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய பேசுபொருளானது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு, அமலாக்கத்துறை சட்ட விரோத கருப்புப் பண பரிமாற்றத்திற்கான சம்மன் வழங்கியுள்ளது என்று கூறி வயதான விவசாயி ஒருவர் பேசும் 1:48 நிமிடங்கள் கொண்ட வீடியோ கொண்ட ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
விவசாயிகள் கண்ணய்யன் (73) மற்றும் கிருஷ்ணன் (70) ஆகியோர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ராமநாயக்கன்பாளையம் வடக்கு காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில், சாதிய அடையாளத்துடன், முகவரியையும் சேர்த்து குறிப்பிடப்பட்ட சம்மன் ஒன்று, சென்னை சத்தியபவனில் இயங்கக்கூடிய அமலாக்கத்துறையிடமிருந்து வந்துள்ளது. மேலும் அதில் ஜூன் 22, 2023 என்ற தேதியும் அச்சிடப்பட்டிருப்பதைப் காண முடிகிறது. இதில், கதவு எண் குறிப்பிடப்படவில்லை, ஆனால் சாதி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பேசும்போது, எங்களுக்கு பூர்வீகமாக ஆறறை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதன் அருகில் விளை நிலம் வைத்துள்ள பாஜக பிரமுகர் எங்கள் நிலத்தை வித்துவிட்டு ஓடிவிடுமாறு மிரட்டல் கொடுத்து வந்தார்.
இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இது குறித்து பல முறை சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலையங்களில் பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்களை பாதுகாக்க சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாதி பெயரை குறிப்பிட்டு இழிவுப்படுத்திய அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஏழை விவசாயியின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் பாஜக மாவட்ட செயலாளர் குணசேகரனுக்கு அமலாக்கத்துறை துனைபோவதா? அமலாக்கத்துறை இதற்கு பதில் அளிக்க வேண்டும். கடிதத்தில் சாதி பெயர் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்
இதே போல டாக்டர் கிருஷ்ணசாமி தனது X தளப்பக்கத்தில்,சேலம் ராமநாயக்கன் பாளையம் தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் பாஜக பொறுப்பாளர் குணசேகரனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! அமலாக்கத்துறை கடிதத்தில் சாதியின் பெயர் குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.! என பதிவிட்டுள்ளார்.