EPS வகுத்துக் கொடுத்த பிளான்…? செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை..? திமுக நிர்வாகி வீட்டில் ரெய்டு!

Author: Babu Lakshmanan
3 August 2023, 8:00 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகவே மாறி மாறி அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.

இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் கூட இதற்கான பின்னணி காரணங்கள் வலுவானவையாக உள்ளன.

செந்தில் பாலாஜியை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றும் விதத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.

இதில் அவருடைய சகோதரர் அசோக்குமார் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பதன் அடிப்படையில் அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால் அசோக் குமார் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதேநேரம் மே மாத இறுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கரூரில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 11 லட்ச ரூபாய்க்கு தானமாக பெற்று அந்த இடத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட ஆடம்பர பங்களா ஒன்றை அசோக்குமார் கட்டி வருவதை கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்ததும் அத்துறை அதிகாரிகளும் தீவிரமாக களமிறங்கினர். ஏற்கனவே செந்தில் பாலாஜி, லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்குடன் இதையும் சேர்த்து விசாரிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையேதான் கிணறு வெட்ட பூதம் கிளம்பி கதையாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன பேசியதாக கூறப்படும் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில்
கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாயை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பரபரப்பு தகவலும் சேர்ந்து கொண்டது.

டாஸ்மாக் மதுக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்படுவதும், சட்டவிரோத பார்களுக்கு மது ஆலைகளில் இருந்து, நேரடியாக மதுபானம் கொள்முதல் செய்ததன் மூலம் கிடைத்த பணமும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக திரண்டு விட்டது என்ற குற்றச்சாட்டுகளும் பொதுவெளியில் எழத் தொடங்கின.

இப்படிப்பட்ட சங்கிலித் தொடர் நிகழ்வுகள்தான் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குடன் தொடர்பு கொண்டதாக மாறியது.

இதனால்தான் அமலாக்கத்துறை தங்களது வழக்கிற்கு இவற்றையும் முக்கிய ஆதாரங்களாக திரட்டும் விதத்தில் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் இருவருக்கும் நெருக்கமானவர்களின் வீடுகள் அலுவலகங்களில் அவ்வப்போது அதிரடி சோதனையும் நடத்தி வருகிறது.

அதுபோன்றதொரு சோதனையில்தான் ஆகஸ்ட் இரண்டாம் தேதி மதியம் 2 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதனின் கொங்கு நகர் வீட்டிலும், தமுத்துப்பட்டியில் உள்ள அவருடைய பண்ணை இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 க்கும் மேற்பட்டோர் இரு குழுக்களாக ஈடுபட்டனர்.

ஐந்து மணி நேரம் நீடித்த இந்த ரெய்டின்போது ஏராளமான முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பழனியில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வரும் சாமிநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் இருவருக்கும் மிக நெருக்கமானவர் என்று கூறப்படுவதும் உண்டு.

வேடசந்தூர், சென்னை,மதுரை கோவை, ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான நிதிநிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களிலும் சாமிநாதன் நிதி நிறுவனங்கள் மூலம் தனது எல்லையை தேசிய அளவில் விரிவு படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் உண்டு.

அதேநேரம் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டும் 27 மாவட்டங்களின் டாஸ்மாக் கடைகளையும், சட்டவிரோத மது பார்களையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் திமுக நிர்வாகி சாமிநாதன் வைத்திருப்பதாக கூறப்படுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் ரெய்டுக்கு மூல காரணம்.

இதேபோல ஆகஸ்ட் 3ம் தேதி கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், அம்பாள் நகரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு உள்ளிட்ட 5 இடங்களிலும், கோவை ராமநாதபுரம் பகுதியில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் முத்துபாலன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன், டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்து பாலன், அமைச்சரின் உதவியாளர் சங்கர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் ரீதியாகவும் பேசப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியபோது அவரிடம் திமுக அரசின் ஊழல்கள் குறித்து 150 பக்க ஆதாரங்களை வழங்கியும் இருக்கிறார். அப்போதே இது குறித்து பரபரப்பான செய்திகள்
வெளியாகின.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறும் முக்கிய விஷயங்கள் இவைதான்.

“திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழகத்தில் சட்ட விரோத மதுபார்கள் மூலமாகவும், பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதன் வழியாகவும் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பயன்படுத்துகிறார். 2024 தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தாராள பண உதவியும் செய்யப்படுகிறது.

இந்தப் பணம் பல்வேறு மாநிலங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வரும் சில திமுக நிர்வாகிகள் வழியாக பகிரப்பட்டும் வருகிறது.

அந்த நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் தனது பெயர் இதில் எங்கும் அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் மூலம் 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், சட்டவிரோத பார்கள் ஆகியவற்றின் வாயிலாக குவிக்கும் முறைகேடான பணத்தை திமுகவின் தலைமை குடும்பத்தினருக்கு கொடுத்தது போக பாஜகவை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக பல மாநிலங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு திமுக வாரி இறைத்தும் வருகிறது. 2024 தேர்தலில் நாடு முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாயை எதிர்க்கட்சிகளுக்கு செலவிட திமுக தலைமை இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் ஆணிவேர்களாக இருப்பவர்கள் செந்தில் பாலாஜி, அசோக்குமார், சாமிநாதன் ஆகிய மூவரும்தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிட்டது. ஆனால் அதற்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தது, செந்தில் பாலாஜிதான். அதற்குரிய ஆதாரங்களைத்தான் உங்களிடம் கொடுத்திருக்கிறேன் என்று அமித்ஷாவிடம் அப்போது எடப்பாடி பழனிசாமி விளக்கமாகவே கூறியிருக்கிறார்.

இந்த தகவலின் அடிப்படையில் தான், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை மத்திய அரசு தனது அமைச்சர்கள் மீது ஏவி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருதுகிறார். இதுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து விடவேண்டும் என்று திமுக துடியாய் துடிப்பதற்கு முக்கிய காரணம்.

அதேநேரம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை குறி வைப்பதற்கு திமுக போடும் தேர்தல் கணக்கு மட்டுமே பின்னணி என்று கூறி விடமுடியாது.

ஏனென்றால் சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 16ம் தேதி, செந்தில் பாலாஜி மீதான லஞ்ச வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து எட்டு நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக் குமாருக்கு நெருக்கமான உறவினர்கள் நண்பர்களின் வீடுகள் என கரூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சென்னை நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய அதிரடி ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள், அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின்போது கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையிலும்தான், தற்போது தீவிர விசாரணையே நடந்து வருகிறது. அதனால்தான் அமலாக்கத்துறையிடம் சென்றால் நம்மை கைது செய்யாமல் விட மாட்டார்கள் என்ற பயத்தில் அசோக் குமார் இதுவரை அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகவில்லை என்றே சொல்லவேண்டும்.

இப்போது இன்னொரு திமுக நிர்வாகியும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வருவதால் அது அசோக் குமாருக்கு மட்டுமல்ல, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், திமுகவுக்கும் பெரிய அளவில் குடைச்சலைக் கொடுக்கும் என்பது நிச்சயம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ கேட்க கேட்க தலையை கிறுகிறுவென சுற்ற வைக்கும் விவகாரமாகத்தான் இது உள்ளது என்பது மட்டும் நன்றாக புரிகிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 326

    0

    0