அதிமுக விவகாரத்தில் குழப்பும் தேர்தல் ஆணையம்… கட்சி நிர்வாகிகள் கிளப்பிய சந்தேகம்; களத்தில் இறங்கிய எடப்பாடியார்..!!
Author: Babu Lakshmanan22 April 2023, 12:12 pm
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக போட்டியிடுவது பற்றி கர்நாடக அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதில் “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு பகுதி எல்லாவற்றிலுமே கட்சி என்று வரும் இடத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றே தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளர்களை மட்டுமே அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கடிதத்தை அனுப்பிய பிறகும் கூட மனுக்கள் பரிசீலனைக்கு பின்பு தேர்தல் ஆணையம் இதுபோல் குழப்புவது சரியல்ல.
புலிகேசி நகர் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் டி.அன்பரசனின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை சுயேச்சைகள் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். அதுதான் நியாயமும் கூட.
கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும், காந்தி நகர் தொகுதியில் ஓபிஸ் ஆதரவாளர் கே.குமாரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதிலும் கட்சி என்ற இடத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றே தேர்தல் ஆணையம்
குறிப்பிட்டு இருக்கிறது.
எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் விஷயத்தில் புலிகேசி நகர் அஇஅதிமுக வேட்பாளர் டி.அன்பரசனைத் தவிர வேறு யாருக்கும் கட்சியின் சின்னம் கிடைத்து விடாதபடி மிகுந்த கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று அதிமுக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்களை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியுள்ளது. அதில், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளது.
அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாகவும், வேறு எந்த தொகுதியிலும் அதிமுக போட்டியிடவில்லை எனவும், காந்திநகர் தொகுதியில் ஓ பி எஸ் தரப்பு வேட்பாளர் மனு ஏற்கப்பட்ட நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை எனவும் அதிமுக அந்த கடித்ததில் விளக்கமளித்துள்ளது.
ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் தவறான புரிதலால் ஓ.பி.எஸ் தரப்பு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதிமுகவின் இந்த கடிதத்தை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் சுயேட்சை என அறிவிக்கப்படுவாரா..? இல்லையா..? என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெளிவாகி விடும்.