வனப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி எங்கே? விடியா திமுக அரசை கண்டித்து வரும் 30ஆம் தேதி நீலகிரியில் ஆர்ப்பாட்டம் : இபிஎஸ் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2022, 9:38 pm
வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத திமுக அரசை கண்டித்து கண்டனப் பேரணி நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2021, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது, நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த விடியா திமுக அரசு, மலைவாழ் மக்களுக்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
அதில் முக்கியமானது, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வனவளம் சார்ந்த மற்றும் வனப் பகுதி மக்களின் அன்றாட மற்றும் நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண “வன ஆணையம்” அமைக்கப்படும் என்று இந்த விடியா திமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்த பின்னும், வனப் பகுதி மக்களின் நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வண்ணம் இதுவரை எந்த முயற்சியையும் இந்த விடியா அரசு முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பல்வேறு நிலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. மேலும், அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்தும் இந்த விடியா அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி, வன வளம் சார்ந்த மற்றும் வனப் பகுதி மக்களின் அன்றாட, நெடுங்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நீலகிரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வரும் 30ஆம் தேதி காலை 11 மணியளவில், கூடலூர் நகராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கி, கூடலூர் காந்தி சிலை அருகில் நிறைவடைந்து, அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.