இது திமுகவின் கையாலாகத்தனம்… உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு… மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இபிஎஸ் கோரிக்கை

Author: Babu Lakshmanan
20 July 2022, 4:18 pm

அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களின்‌ மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டிவரி உயர்வினை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-ஆவது கூட்டம்‌ மத்திய நிதியமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ விடியா திமுக அரசின்‌ நிதி அமைச்சரும்‌ கலந்து கொண்டார்‌. இக்கூட்டத்தில்‌ ஜிஎஸ்டி வரியில்‌ இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள்‌ வரி வரம்புக்குள்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழை, எளிய மற்றும்‌ நடுத்தர வகுப்பு மக்கள்‌, சாமான்ய மக்கள்‌ உட்பட அனைவரும்‌ அன்றாடம்‌ பயன்படுத்தும்‌ பல அத்தியாவசியப்‌ பொருட்களுக்கு சரக்கு மற்றும்‌ சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில்‌ அடைத்து விற்கப்படும்‌ அரிசி, கோதுமை மற்றும்‌ அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர்‌, தேன்‌, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்‌, உலர்‌ பழங்கள்‌, காய்கறிகள்‌, நாட்டுச்‌ சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப்‌ பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால்‌ மேற்கண்ட பொருட்களின்‌ விலைகள்‌ தாருமாறாக உயரும்‌ என்ற காரணத்தால்‌, ஏழை, எளிய மற்றும்‌ நடுத்தர வகுப்பு மக்கள்‌ குறிப்பாக தாய்மார்கள்‌ இந்த 87 வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்‌.

இந்த வரி விதிப்பினால்‌, உணவகங்களில்‌ அனைத்து உணவு வகைகளின்‌ விலைகளையும்‌ உயர்த்தும்‌ நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களை நம்பி இருக்கும்‌ நடுத்தர வருவாய்‌ பிரிவு மக்கள்‌ மட்டுமல்ல, சிறு உணவகங்கள்‌ நடத்தி வருபவர்களும்‌, அதில்‌ பணிபுரிபவர்களும்‌ இந்த வரி விதிப்பினால்‌ ஏற்படும்‌ தொழில்‌ பாதிப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியின்‌ போது, ஒவ்வொரு முறையும்‌ நடைபெறும்‌ ஜிஎஸ்டி கவுன்சில்‌ கூட்டத்தில்‌, அரசின்‌ சார்பாக கலந்துகொண்ட முன்னாள்‌ அமைச்சர்‌ திரு. டி. ஜெயக்குமார்‌ அவர்கள்‌, தமிழகத்தின்‌ சார்பாக பல அத்தியாவசியப்‌ பொருட்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. ஒருசில பொருட்களுக்கு வரி குறைப்பும்‌ பெறப்பட்டது.

மேலும்‌, கோவை மாவட்டத்தில்‌ சிறு, குறு தொழில்கள்‌ வளர்ச்சி பெறவேண்டும்‌ என்ற முறையில்‌ வரிக்‌ குறைப்பு பெறப்பட்டது. குறிப்பாக, இல்லங்கள்‌ தோறும்‌ பயன்படுத்தும்‌ மாவு அரைக்கும்‌ வெட்‌ கிரைண்டர்களுக்கான வரி 18 சதவீதத்தில்‌ இருந்து 5 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு
தொழில்‌ வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. தற்போது இந்த வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இப்பகுதியில்‌ உள்ள சிறு, குறு தொழில்‌ நிறுவனங்களுக்கு பெரும்‌ பாதிப்பை ஏற்படுத்தும்‌.

இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில்‌ இருந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில்‌ கூட்டத்தில்‌ பங்கேற்ற இந்த விடியா அரசின்‌ நிதி அமைச்சர்‌, மக்களை பாதிக்கக்கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல்‌ வாயில்லாப்‌ பூச்சியாக இருந்தது ஏன்‌ ? ஆனால்‌, திராவிட மாடல்‌ என்று பீற்றிக்‌ கொள்வதில்‌ எந்தக்‌ குறையும்‌ இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, தாங்கள்‌ தான்‌ வலிமையானவர்கள்‌ என்று கூறிக்கொள்ளும்‌ இந்த ஆட்சியாளர்களின்‌ கையாலாகாத்தனம்‌ இதன்‌ மூலம்‌ வெளிப்படுகிறது.

தமிழ்‌ நாடு அரசின்‌ சார்பில்‌ இந்த 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில்‌ கூட்டத்தில்‌ கலந்துகொண்ட விடியா அரசின்‌ நிதி அமைச்சர்‌, உணவுப்‌ பொருட்கள்‌ மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எந்த எதிர்ப்பையும்‌ தெரிவிக்காமல்‌, மவுனம்‌ காத்தது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம்‌ ஏழை, எளிய மற்றும்‌ நடுத்தர மக்களின்‌ மீது இந்த விடியா அரசின்‌ முதலமைச்சரும்‌, திமுக-வினரும்‌ கொண்டுள்ள அக்கறை இன்மை நன்கு வெளிப்பட்டுள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை குறிப்பாக, தாய்மார்களைப்‌ பெரிதும்‌ பாதிக்கும்‌
உணவுப்‌ பொருட்கள்‌ மீதான இந்த வரி விதிப்பை திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்று ஜிஎஸ்டி கவுன்சிலையும்‌, மத்திய அரசையும்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொண்டு எந்தவித எதிர்ப்பையும்‌ தெரிவிக்காத இந்த விடியா திமுக அரசை வன்மையாகக்‌ கண்டிப்பதோடு, ஏழை, எளிய மற்றும்‌ நடுத்தர மக்களின்‌ தினசரி வாழ்க்கையில்‌ பெரும்‌ சுமையை ஏற்படுத்தும்‌ இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப்‌ பெறவேண்டும்‌ என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு, விடியா திமுக அரசின்‌ சார்பில்‌ அழுத்தம்‌ தர வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 768

    0

    0