தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு… செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி…!!
Author: Babu Lakshmanan17 June 2023, 4:57 pm
சென்னை ; செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதலமைச்சருக்கு ஏன் வந்தது என்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய அமலாக்கத் துறை சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே இந்த திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி நடத்திவரும் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியைப் பற்றி ஏற்கெனவே விமர்சனம் செய்ததை, தன்னெழுச்சியாக உள்நோக்கமின்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வரும் இளைஞர்கள், சமூக பார்வையாளர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் மீது திமுக அரசு, தனது ஏவல் துறை மூலம் பொய் வழக்குகள் புணைந்து, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கௌதம் என்பவரை நேற்று (16.6.2023) காலை, ஈரோடு காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை சுமார் 8 மணி நேரத்திற்குமேல் காவல் நிலையத்திலேயே விசாரணை செய்துவிட்டு, பிறகு இரவு 10 மணிக்குமேல் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்துள்ளனர்.
அதுவரை கௌதம் என்ன குற்றம் செய்தார் என்று அவருடைய பெற்றோரிடமும், கழக வழக்கறிஞர்களிடமும் கூறாமல், இதோ உடனடியாக விடுவித்து விடுகிறோம் என்று தவறான தகவலையே காவல் துறையினர் கூறியுள்ளனர். இச்செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. கௌதம் என்ன குற்றம் செய்தார் என்றால், தற்போது சிறைப் பறவையாக இருக்கும் செந்தில்பாலாஜியைப் பற்றி, எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது கூறிய குற்றச்சாட்டுகளை வேறு ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதை, இவர் மற்றவர்களுக்கு பகிர்ந்ததுதான்.
திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் அவரது கட்சியினர் கூறியதற்காக, எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை, குறிப்பாக கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, திமுக-வினரின் வற்புறுத்தலுக்காக தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கைது செய்யும் நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் காவல் துறை எப்படி சுதந்திரமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதே காவல் துறை இன்று ஆளும் கட்சியின் ஊதுகுழலாக மாறியுள்ளது வேதனைக்குரியதாகும். விரைவில் ஆட்சி மாறும்; காட்சி மாறும். தவறு செய்யும் ஒவ்வொரு காவல் துறையினரும் பதில் சொல்லும் காலமும் வரும். விமர்சனங்களை தாங்கிக்கொண்டு, அதில் உள்ள உண்மைகளை உணர்ந்து, தன்னை திருத்திக்கொள்பவனே உண்மையான தலைவன்.
எனவே, செந்தில்பாலாஜியின் விஷயத்தில் பொதுமக்கள் என்ன கூறுகிறார்கள்; தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்மையாக என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து, இப்போதாவது நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், பிரதான எதிர்க்கட்சியை மிரட்டுவதைக் கைவிட வேண்டும். இனியும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்கள் பணத்தை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பாதுகாக்கும் பொருட்டு சுதந்திரமாக செயல்படக்கூடிய ஊடகங்களையும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களையும், மிரட்டி ஊழல் வாதியை ஒரு புனிதர் போல் காட்டும் முயற்சியை இந்த திமுக அரசும், அதன் பொம்மை முதலமைச்சரும் உடனடியாகக் கைவிட வேண்டும்.
ஒரு சிறைப் பறவையை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்த முதலமைச்சருக்கு ஏன் வந்தது? திமுக-வின் கூட்டணிக் கட்சியினர், நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து, சிந்தித்து அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர்ந்து செயல்பட்டால், மக்களிடத்தில் அவர்களுடைய அடையாளங்கள் மங்காமல் இருக்கும். கைது செய்யப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடித்தால், தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகும். இது, வரலாற்றுப் பிழையாக என்றென்றும் நீடிக்கும். அரசியல் நாகரீகம் கருதி, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.