உளவுத்துறையின் தோல்வி… நெடுஞ்சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் போராட்டம்… திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

Author: Babu Lakshmanan
2 February 2023, 3:47 pm

கிருஷ்ணகிரியில் நடந்து வரும் கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், எருதுவிடும் விழாவுக்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர்.

இந்த நிலையில், எருது விடும் விழாவை நடத்த தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி, அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நடந்து வரும் கலவரத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :- கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து, ஹோசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த விடியா அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!