கருகிப்போன 60 ஆயிரம் ஏக்கர் சோளப்பயிர்கள்… கவலையில் மூழ்கிய கடலூர் விவசாயிகள் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வைத்த கோரிக்கை..!!
Author: Babu Lakshmanan2 November 2023, 7:14 pm
சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலூகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுமையாகக் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி உள்ளனர். பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில், கடன் வாங்கி சோளம் பயிரிட்ட விவசாயிகள், வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலையில், தாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பும் வீணாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விடியா திமுக அரசின் வேளாண் துறை மந்திரி, உடனடியாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி, சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறேன்.
சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.