மன உளைச்சலில் மாணவ செல்வங்கள்… தமிழகத்திலேயே மருத்துவ படிப்புக்கு அனுமதியுங்கள் : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan9 March 2022, 1:51 pm
சென்னை : உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் 2 வார காலமாக ரஷ்ய படையினர் போர் நடத்தி வருகின்றனர். பயங்கர மற்றும் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு இருதரப்பினரும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, உக்ரைனில் இருந்து பொதுமக்கள் அண்டை நாடுகளுக்கும், தங்களின் சொந்த நாடுகளுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், ஆபரேசன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுமார் 60%க்கும் மேலான இந்தியர்கள் மீட்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே, சொந்த ஊர்களுக்கு திரும்பிய மாணவர்களை, தமிழகத்திலேயே மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் நமது தமிழக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். நமது மாணவச்செல்வங்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.