கூட்டணி விஷயத்தில் அமித்ஷா போட்ட குண்டு…! பாஜகவின் ஆசை நிறைவேறுமா…? அதிமுக ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 4:39 pm

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா இருவரையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் 6 முன்னாள் அமைச்சர்களும் கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து பேசிய பிறகு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றதால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி பேசப்பட்டும் உள்ளது.

மேலும் சில கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சு வந்தபோது பாமக, தேமுதிக கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்பட்டதை எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஏற்றுக் கொண்டும் விட்டார்.

அதேநேரம், டிடிவி தினகரனின் அமமுகவையும் ஓ பன்னீர்செல்வத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அமித்ஷாவின் விருப்பத்திற்கு அதிமுக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்படவில்லை கூறப்படுகிறது.

குறிப்பாக, “ஓபிஎஸ் தேவையில்லை, அங்கிருந்து பலரும் எங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக தொண்டர்களே இல்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில், அவர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவே இல்லை. இதுதான் தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம். இல்லாவிட்டால் திமுகவுக்கு தனி மெஜாரிட்டியே கிடைத்திருக்காது” என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

டிடிவி தினகரனை பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக புதிய கட்சி என்பதால் அதற்கு 21 லட்சம் வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அது சரிபாதியாக குறைந்துவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது இன்னும் கணிசமாக குறையும். மேலும் அவருடைய கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் எங்கள் பக்கம் திரும்பி விட்டனர். எனவே அவரை கூட்டணியில் சேர்க்ககூடாது”என்று அதிமுக தலைவர்கள் அமித்ஷாவிடம்
எடுத்து கூறியதாக தெரிகிறது.

என்ற போதிலும் நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால்
இதில் பாஜக அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.
அமித்ஷாவும், ஜே பி நட்டாவும் டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும் தலா ஒரு தொகுதியை ஒதுக்கி கூட்டணியை இன்னும் பலப்படுத்தலாம் என்பதில்தான் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் எந்த உத்தரவாதமும், உறுதிமொழியும் தரப்படவில்லை.

இந்த நிலையில்தான் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தனியார் செய்தி ஊடகத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டியில் அதிமுக பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தமிழகத்தில் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை” என்று கருத்து தெரிவித்த அவர் அத்துடன் நிறுத்தி கொண்டிருந்தால் தெரியாது. ஆனால் “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது என்னைச் சார்ந்தது இல்லை” என்று அமித்ஷா கூறியதுதான் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது.

இதனால் அதிமுக தலைவர்கள் பலத்த அதிர்ச்சிக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த குஷிக்கும் உள்ளாகி உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதேநேரம் மூத்த அரசியல் விமர்சகர்களின் இது தொடர்பான கருத்தோ முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

“எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அமர்ந்து பேசி சுமுகமான முடிவை எடுப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை. ஏனென்றால் 2021 தேர்தலுக்குப் பிறகு இருவரும் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டனர். அவர்களின் நிலைமை விவாகரத்து பெற்ற கணவன், மனைவி போல் ஆகிவிட்டது. அதனால் அவர்களை ஒன்று சேர்ப்பது கடினம். அப்படியே கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் அதற்கான பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.

அதிக பலன் பெற வேண்டும் என்று பாஜக தலைமை விரும்பினால் எடப்பாடி பழனிசாமி பக்கம் போகலாம். இல்லை எங்களுக்கு மிகக் குறைந்த தொகுதிகளில் மட்டும் வெற்றி வாய்ப்பு போதும் என்று கருதினால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் பக்கம் சாயலாம். இந்த இரண்டில் ஒரு வாய்ப்பைதான் பாஜகவால் பெற முடியும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தங்கள் கூட்டணியில் பெரிய கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அதிமுகதான் என்பதை பாஜக மேலிடம் ஏற்றுக்கொண்டு விட்டது. அப்படி இருக்கும்போது ஓபிஎஸ்சையும், டிடிவி தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புவதற்கான காரணம்தான் புரியவில்லை.

ஒருவேளை, இந்த இருவரையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் பாஜக வளர விரும்புகிறதோ என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது.

இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக இருக்கிறது. அதனால் அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளையும் எளிதில் கைப்பற்றி விடலாம் என்று பாஜக தலைமை நினைக்க வாய்ப்புண்டு.

ஆனால் அச்சமுதாய மக்கள் பரவலாக எல்லா கட்சிகளிலுமே உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் குறிப்பிட்ட ஆறு தொகுதிகளில்தான் அந்த சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தவிர நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தமிழக வாக்காளர்கள் அனைவருமே சாதி ரீதியாக ஓட்டுபோடுவது இல்லை என்பதை கடந்த பல தேர்தல் முடிவுகள் மூலம் உணர முடியும்.

சட்டப்பேரவையில் தேர்தலில் வேண்டுமானால் அது குறைவான தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.

அதுமட்டுமின்றி தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கியும் இருக்கிறது. அதேபோல மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள 29 தொகுதிகளில் வலிமை வாய்ந்த சக்தியாக அதிமுக திகழ்கிறது. இத்தகைய நிலையில் டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

இந்த இருவரும் கூட்டணியில் இல்லாத நிலையில் தென் மாவட்டங்களின் ஒரு சில தொகுதிகளில் மட்டும் அதிமுகவுக்கு கிடைக்க கூடிய வெற்றியை இவர்களால் ஓரளவு தடுக்க முடியும்.

அதேநேரம் கூட்டணிக்குள் வந்தால் அதிமுக தொண்டர்களும் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஒன்றாக இணைந்து ஒரு மனதுடன் பணியாற்றுவார்களா? என்ற கேள்வியும் எழும். இது ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பும் பாஜகவுக்கு எதிர்பார்க்கும் பலனையும் தருமா? என்பதும் சந்தேகம்தான்.

ஏனென்றால் டிடிவி தினகரன் 2017 ஆகஸ்ட் முதல் 2020 டிசம்பர் வரை அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன் திரை மறைவில் கை கோர்த்து எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பது தமிழகமே அறிந்த ஒன்று.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி நான்காண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் சசிகலாவும், டிடிவி தினகரனும்தான் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களின் அடி மனதில் ஆழமாக பதிந்தும் உள்ளது.

ஓ பன்னீர்செல்வமோ, அதிமுக தொண்டர்கள் தங்களது கோவிலாக வழிபடும் தலைமை கழக அலுவலகத்திற்குள் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்தேதி தனது ஆதவாளர்கள் புடை சூழ புகுந்து சூறையாடியதுடன் கட்சியின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்க உடந்தையாக இருந்தார் என்பதும் வெளிப்படை. இது அன்று அத்தனை டிவி செய்தி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பும் ஆனது. இதனால் அதிமுக தொண்டர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு இவர்கள் மூவரும் அதிமுகவை அழித்து நிரந்தரமாக திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டும் வருகின்றனர். இதை டெல்லி பாஜக மேலிடம் உணர்ந்ததாக தெரியவில்லை.

இப்படி ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாருமே விரும்பமாட்டார்கள். ஒருவேளை வலுக்கட்டாயமாக இணைத்தால் பாதகமாக முடியும் வாய்ப்புகளே அதிகம். மீண்டும் அதிமுகவுக்குள் பெரும் குழப்பமும் உண்டாகும்” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டிய நெருக்கடி டெல்லி மேலிட பாஜகவிற்குத்தான் உள்ளது!

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 469

    0

    0