வெற்றிக்கு மேல் வெற்றி… ஓபிஎஸ் தொடர்ந்த அடுத்தடுத்த இரு வழக்குகளிலும் இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு ; ஒற்றை தலைமையில் அதிமுக..!!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 4:19 pm

அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கிய பிறகு, மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் உருவாகின. அதிலும், 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும், என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அளிக்க பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது கட்சி அலுவலகத்தின் சாவியை தன்வசம் ஒப்படைக்கக் கோருவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளார். கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலகச் சாவியை ஒப்படைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். பிறகு எப்படி அவர் அலுவலகத்திற்கு உரிமை கோருகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எனவே, அதிமுக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது சரியான நடவடிக்கைதான் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும், எதிர்மறையான தீர்ப்புகளே வந்திருப்பதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!