EPS-ன் அடுத்த இலக்கு என்ன…? அதிமுக முடிவால் அதிர்ந்த திமுக…? திசை மாறும் கூட்டணி கணக்குகள்…!

Author: Babu Lakshmanan
26 September 2023, 9:10 pm

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

கூடவே, இது அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்ற விவாதங்களும் எழுந்துவிட்டன.

அதேநேரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்படுகிறது என்ற விமர்சனத்திற்கும், அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து நடத்தும் போலி நாடகம்தான் இது என்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினரும் கேலி பேசி வந்ததற்கும் பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல மறைந்த தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா போன்றோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியதை அதிமுக தலைமை முக்கிய குற்றச்சாட்டாக கூறி பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதால் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரும் பாஜகவை நெருங்க முடியாதபடி அதிமுக செக் வைத்தும் விட்டது.

இதையும் மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நமது முன்னோடி தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் மீது நீங்கள் வைத்திருப்பதாக கூறப்படும் பற்று, பாசம் எல்லாமே பகல் வேஷம்தானா? என்ற கேள்வியை அதிமுக தொண்டர்கள் அனைவரும் எழுப்பும் நிலை ஏற்படலாம். இதனால் ஓரிரு சதவீத சமுதாய ஓட்டுகளை வைத்துள்ள இந்த மூவரின் பாடும் படு திண்டாட்டம் தான்.

அதேநேரம் மறைந்த திமுக பொதுச் செயலாளர் அண்ணா 67 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக ஏன் இதுவரை தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து எழுப்பி திமுகவுக்கு
கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் நிச்சயமாக கூறலாம்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி பாஜக தலைமையை 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை அனுசரித்து சென்றிருக்கலாம். இப்போதே வெளியேறி விட்டதால் அதிமுகவுக்குதான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் அதிமுக அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டது என்ற விமர்சனத்தை பாஜக ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் முன் வைக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு கட்சியை மிக வேகமாக வளர்த்தெடுத்து வருகிறார். அதற்காக அவர் கடுமையாக உழைக்கவும் செய்கிறார். அவருக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. பிரதமர் மோடிக்கும் தமிழகத்தில் தனிசெல்வாக்கு உள்ளது. எனவே பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்குதான் அதிக லாபம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவை தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே பாஜக தேர்தலை சந்தித்தது. அதில் எதிர்பார்த்த வெற்றி பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். இதை உணர்ந்து கொண்டு 2021 ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போதே தனித்து களம் இறங்கும் முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும். அதேநேரம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் அவருடைய விருப்பத்தின்படி தனித்துப் போட்டியிட்டது.

கட்சியை வளர்ப்பதில் என் பாதை முற்றிலும் மாறுபட்டது என்று அடிக்கடி கூறும் அண்ணாமலை இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் துணிந்து பாஜகவை தனித்து களம் இறக்கி இருக்கவேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் அதிரடி காட்டவில்லை.

மாறாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பாஜக 25 இடங்களில் வெற்றி பெறும். பாஜக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்.

இந்த இரண்டு தேர்தல்களிலுமே அதிமுகவுடன்தான் கூட்டணி என்பதை அவர் எங்குமே சொல்ல வில்லை. இதன் காரணமாகத்தான் அதிமுகவினர் பெரிதும் போற்றும் அண்ணா, ஜெயலலிதா இருவரையும் வேண்டுமென்றே அண்ணாமலை விமர்சித்து இருக்கிறாரோ என கருதவும் தோன்றுகிறது. உண்மையிலேயே கூட்டணி தர்மம் பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்து இருந்தால், இதை அண்ணாமலை நிச்சயம் தவிர்த்து இருப்பார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் காணப்படுகிறது.

அதேநேரம் மற்ற கட்சிகளின் முன்னோடி தலைவர்களை அண்ணாமலையால் இப்படி கடுமையாக விமர்சித்துப் பேச முடியுமா? என்ற கேள்வியும் பொது வெளியில் எழுந்துள்ளது. ஆனால் எதைப் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு பேசாமல் போய்விடுவார். அவர் அனைவராலும் அறியப்பட்ட ஒரு தலைவர் அல்ல என்று நினைத்துக் கூட அண்ணாமலை இப்படி பேசி இருக்கலாம். ஒரே நேரத்தில் பிரபல கட்சிகளான திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்து பேசினால்தான் தமிழகத்தில் பாஜகவை வேகமாக வளர்க்க முடியும் என்று கருதியும் எடப்பாடி பழனிசாமியை அவர் கடுமையாக விமர்சித்து பேசியிருக்க வாய்ப்பு உண்டு.

உண்மையிலேயே அதிமுகவை மிரட்டி அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும், தங்களது தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் அதிமுகவிற்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்பதுதான் டெல்லி பாஜக தலைமையின் ஒரே நோக்கமாக இருப்பதுபோல் தெரிகிறது.

ஆனால் பாஜகவில் இருந்து கொண்டே பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தினமும் வசைபாடும் முன்னாள் எம்பி சுப்பிரமணிய சுவாமிக்கு பாஜகவில் முன்பு போல் மரியாதை கொடுக்கவேண்டும், அவரை மத்திய அமைச்சராக நியமிக்கவேண்டும் என்று யாராவது கோரிக்கை வைத்தால் அதை பாஜக மேலிடம் ஏற்றுக் கொள்ளுமா?…

அதுபோல்தான் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்ற டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் அதிமுகவில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையும். இதை அண்ணாமலையோ டெல்லி பாஜக மேலிடமோ புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் சாதி பார்த்து யாரும் ஓட்டு போடுவதில்லை. அதை பல தேர்தல் முடிவுகளில் கண்கூடாக பார்க்கவும் முடியும். ஆனால் டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் ஓட்டுகளை அப்படியே அள்ளி குவித்து விடுவார்கள். அதன் மூலம் 25 தொகுதிகளில் நம்மால் அமோக வெற்றி பெற முடியும் என்று தேசிய பாஜக நினைக்கிறதோ, என்னவோ தெரியவில்லை.

2014-ல் பாஜக தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டபோது 18 சதவீத வாக்குகள் வாங்கியதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்தத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக 10 சதவீத ஓட்டுகளுடன் மிகப் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. இன்றைக்கு அந்த கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேபோல பாமகவின் ஓட்டு வங்கியும் ஒரு சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.

மேலும் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருப்பதால் பாஜகவுடன் இணைந்து போட்டியிட பாமக முன் வருமா என்பதும் கேள்விக்குறியாகி விட்டது. பாஜகவை வெளிப்படையாக ஆதரித்தாலும் தேர்தலில் போட்டியிட விரும்பாமல் சிறு சிறு கட்சிகளும் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். இந்தக் கட்சிகளின் தலைவர்கள் அதிமுக வெளியேறியதை கோபத்துடன் விமர்சிப்பதே அவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டதை காட்டுகிறது. இதனால் இந்த சிறு சிறு கட்சிகளை தங்களது கூட்டணியில் தக்க வைத்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்கே தமிழக பாஜக படாத பாடு படவேண்டி இருக்கும்.

ஓபிஎஸ்ஐ பொறுத்தவரை ஜெயலலிதாவையும், அண்ணாவையும் அண்ணாமலை விமர்சித்ததை மறந்துவிட்டு பாஜகவுடன் கைகோர்க்க தயங்கமாட்டார். ஏனென்றால் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தையே அடித்து நொறுக்கி சூறையாடிய அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அதேபோல எந்த காலத்திலும் பாஜக கூட்டணியில் சேர மாட்டேன் என்று சபதம் எடுத்த டிடிவி தினகரனின் பார்வையும் இனி அக் கட்சியை நோக்கி திரும்பலாம்.

இவர்களால் தென் மாவட்டங்களில் நான்கைந்து தொகுதிகளில் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆனால் பாஜக கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் அளவிற்கு அது இருக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிக் கொண்டிருப்பதால்
திமுக அணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவற்றின் பார்வை அதிமுகவின் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் பாஜக-பாமக இருக்கும் இடங்களில் விசிக ஒருபோதும் இடம் பெறாது என்று ஏற்கனவே திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமானும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

இதனுடன் கூடுதலாக இன்னொரு சாதகமான நிலையும் அதிமுகவிற்கு உருவாகி இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சிறுபான்மையினரின் மொத்த ஓட்டுகளில் 25 முதல் 30 சதவீத வாக்குகள் அதிமுகவிற்கு தொடர்ந்து கிடைத்து வந்தது.
50 முதல் 55 சதவீத ஓட்டுகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சென்றது.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதை பூதாகரமாக்கி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ததால் சிறுபான்மையினரின் முழுமையான ஓட்டுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே அறுவடை செய்து வந்தன.

இப்போது பாஜகவுடன் கூட்டணி, இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுக்கு கிடைத்த சிறுபான்மையினரின் ஓட்டுகள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது.

ஏனென்றால் இனி அதிமுகவையும், பாஜகவையும் தொடர்புபடுத்தி திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ இப்பிரச்சனையை விமர்சித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதிமுகவின் முடிவு அக்கட்சிக்கு கூடுதல் பலம் தருவதாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சரி! பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக நிரந்தரமாக வெளியேறி இருப்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?…

“பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டதை முன்பு ஜெயலலிதா எடுத்த துணிச்சலான முடிவுடன் எல்லோரும் ஒப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நாட்டை ஆளும் ஒரு தேசியக் கட்சிக்கு எதிராக முடிவெடுக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்தது, பாராட்டுக்குரிய ஒன்றுதான்.

எனினும் அவருக்கு இனிமேல்தான் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டவேண்டிய நெருக்கடியே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் சுமார் 8 மாதங்கள் ஓ பன்னீர்செல்வத்துடன் மல்லுக் கட்டுவதிலேயே அவருக்கு காலம் கரைந்து போய்விட்டது. இந்த நேரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு எதிரான போராட்டங்களையும், தாக்குதல்களையும் முன்னெடுத்து
திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டார்.

அதிமுக பொதுக்குழுவும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்த பிறகுதான் அதிமுகவின் செயல்பாடுகள் வேகம் பிடித்தன. அதுவும் கடந்த மாதம் 20ம் தேதி மதுரையில் நடந்த எழுச்சி மாநாட்டுக்கு பிறகு அதிமுக பல மடங்கு சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி இருக்கிறது.

அதேபோல மகளிரணி, இளைஞரணி செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி இன்னும் முடுக்கி விட வேண்டும். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கும் இப்போதே தயாராக வேண்டும். ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை எடப்பாடி பழனிசாமி அளித்தால் பெரும்பாலான முக்கிய கட்சிகளை அதிமுகவால் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்து விட முடியும். ஏனென்றால் தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்துள்ள எந்த கட்சியும் அமைச்சரவையை பங்கிட்டு கொண்டதில்லை. இந்த உத்தரவாதத்தை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அளித்தால் அதிமுக கூட்டணியின் வலுவும் அதிகரிக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் நிலையும் அக் கட்சிக்கு வரும்.

இந்த முக்கிய அம்சங்களை எடப்பாடி பழனிசாமியும் கவனத்தில் கொண்டுதான் தேர்தல் இலக்குகளை நிர்ணயித்து வலுவான கூட்டணியை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் தெரிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடித்து விட்டது என்பதுதான் உண்மை!

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 369

    0

    0