அபாண்டமாக வீண் பழி… பிரபல தொலைக்காட்சிக்கு கெடு விதித்த இபிஎஸ்… 48 மணிநேரத்திற்குள் அது நடந்தாக வேண்டும் என நோட்டீஸ்
Author: Babu Lakshmanan1 April 2022, 8:06 pm
தனது வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறான தகவலை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் துபாயிக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆடிட்டர் ஆகியோரும் சென்றதாக சர்ச்சை எழுந்தது. அரசு முறைப் பயணம் இல்லாமல் இருந்தால், திமுகவின் சொந்த செலவில் அரசு அதிகாரிகள் எப்படி பயணம் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.
அதோடு, முதலமைச்சர் ஸ்டாலின் துபாயில் முதலீடு செய்வதற்காகவே சென்றதாக எதிர்கட்சியினர் சரமாரியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். துபாயில் இருந்து திரும்பிய உடனேயே இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று தற்போதைய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது தொடர்பாக விவாதம் நடத்தியது. அதில், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ய பணம் எடுத்துச் சென்றாரா..? என்றும், அவருடன் மகன், மாமனார் ஆகியோர் சென்றார்களா..? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனது வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறான தகவலை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர், நான் தமிழக முதல்வராக இருந்தபோது ,தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன்,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும்,கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார் எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.