தேனியில் எகிறிய ஓபிஎஸ்.. கோபத்தின் உச்சத்தில் இபிஎஸ்… சைலண்டாக காய் நகர்த்தும் அதிமுக : தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!
Author: Babu Lakshmanan2 August 2023, 12:40 pm
தேனியில் கோடநாடு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புது திட்டத்தை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து விட்டது. இதையடுத்து, டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்து விட்டார்.
இதனிடையே, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்து கொண்டனர்.
அப்போது, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும், என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவின் கொடி மற்றும் கட்சிப் பெயரை பயன்படுத்தினர். ஏற்கனவே, அதிமுக கொடி மற்றும் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், மீண்டும் கொடி மற்றும் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தியதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக தங்களது கட்சி கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.